சிறப்பு தொகுப்பு ,ஜூன் 20 : காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக ,இந்தியாவில் கோடை காலத்தில் மட்டுமின்றி இனி மழைக்காலத்திலும் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை புதிய ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ,ஜூலை முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை மாதங்களில் மட்டுமே நிலவி வந்த இந்த தாங்க முடியாத வெப்ப அலை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் நிகழ்வு ,தற்போது ஒட்டுமொத்த பருவகால சுழற்சியையே மாற்றி அமைத்து வருகிறது. உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வு இன்னும் இரண்டு டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும்பட்சத்தில் ,இந்தியாவின் மொத்த பரப்பளவில் சுமார் 53 விழுக்காடு பகுதிகள் இந்த புதிய பருவமழைக்கால வெப்ப அலையின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகும் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
also : ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது
ஆதாரம் இருக்கு; சட்டசபையில் நிரூபிக்க தயார்: டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!
இந்த தீவிர காலநிலை மாற்றம் நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 120 கோடி மக்கள் இந்த ஈரப்பதத்துடன் கூடிய கடுமையான வெப்ப அழுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ,உடலின் வெப்பத்தைத் தணிக்கும் இயல்பான வியர்வை வெளியேற்றச் செயல்முறை பாதிக்கப்பட்டு ,மனித ஆரோக்கியத்திற்கு அது பெரும் சவாலாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு ,அரசு தனது தற்போதைய வெப்பத் தடுப்பு மற்றும் மேலாண்மைத் திட்டங்களை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெறும் வெப்பநிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எச்சரிக்கைகளை விடுக்காமல் ,காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவையும் துல்லியமாகக் கணக்கிட்டு ,அதற்கேற்ப புதிய ஒருங்கிணைந்த வெப்பத் தடுப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் தீவிரமாக வலியுறுத்துகின்றனர். மாறிவரும் இந்த புதிய இயற்கைச் சவாலை எதிர்கொள்ள இத்தகைய கொள்கை மாற்றங்கள் தற்போதைய அவசரத் தேவையாக மாறியுள்ளன.







