சென்னை ,ஜூன் 17 : தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை கௌதமி. இவர் தனக்குச் சொந்தமான சொத்துகளை அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களை அளித்திருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஏழு வழக்குகளை முன்வைத்து தற்போது அமலாக்கத்துறை தனது அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளது.

நடிகை கௌதமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லாத காலகட்டத்தில் ,தன்னுடன் உதவியாளராக இருந்த அழகப்பன் என்பவரை நம்பி தனது சொத்துகளை நிர்வகிக்கும் பொது அதிகாரத்தை (Power of Attorney) வழங்கியிருந்தார். இதனைத் தவறாகப் பயன்படுத்திய அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ,கௌதமியின் சொத்துகளைத் தங்கள் பெயருக்கு மாற்றியும் ,போலி ஆவணங்கள் தயாரித்தும் சுமார் 25 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக ,ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 46 ஏக்கர் நிலம் விற்பனை மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு விலைமதிப்பற்ற சொத்துகள் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை கௌதமி காவல் துறையிடம் அளித்திருந்தார்.
also : கோவில்பட்டி அம்மா உணவகத்தில் முறைகேடு: ஹோட்டல்களுக்கு மொத்தமாக இட்லி விற்பனை
இந்த புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு ,பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். இந்த நிலையில் ,இந்த சொத்து மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தற்போது முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ,சென்னை மற்றும் மதுரையில் அழகப்பனுக்குத் தொடர்புடைய மொத்தம் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகர் ஆறாவது அவென்யூவில் உள்ள அழகப்பனின் இல்லம் மற்றும் மதுரையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.
துணை ராணுவப் படையினரின் (CRPF) பலத்த பாதுகாப்புடன் ,50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட பணத்தின் பின்னணி மற்றும் வெளிநாடுகளுக்கு ஏதேனும் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இன்றைய சோதனையின் நிறைவிலேயே கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த முழுமையான விபரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








