காஞ்சிபுரம் , ஜூன் 24: கோயில் நகரமான காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்கள் பல அமைந்துள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி அடுத்த கடம்பர்கோயில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத கடம்பநாதர் சாமி திருக்கோயில் ஆன்மீக ரீதியாக காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது. இத்திருத்தலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவையொட்டி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின. அதனைத் தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் சாஸ்திர விதிகளின்படி அடுத்தடுத்து நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 6 மணி அளவில் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ராஜகோபுரம், மூலவர் மற்றும் அம்மன் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கான புனித நீர் அடங்கிய கலசங்களின் புறப்பாடு தொடங்கியது. மங்கள இசை மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்க புனித கலசங்கள் கோயிலை வலம் வந்து கோபுர உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு கூடியிருந்த சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனைகளை மேற்கொண்டனர். சுப முகூர்த்த நன்னாளில் கோபுரக் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆன்மீகப் பெருவிழாவில் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைக் கோயில் பரம்பரை அறங்காவலர் புத்தளி ராஜசேகர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.





