சிறப்பு டெக் செய்தி , ஜூன் 19 : இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. உலகளாவிய அளவில் டிஜிட்டல் கரன்சி நோக்கிய நகர்வில் இந்தியா தற்போது முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக , உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட UPI எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக வசதி , உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சந்தையில் , PhonePe செயலி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி , இந்தியாவில் யுபிஐ வசதியைப் பயன்படுத்துபவர்களில் 46 சதவீதம் பேர் போன்பே செயலியைத்தான் முதன்மையாகப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தரவரிசைப் பட்டியலில் 33 சதவீதப் பங்களிப்புடன் Google Pay நிறுவனம் இரண்டாம் இடத்திலும் , 7 சதவீதப் பங்களிப்புடன் Paytm நிறுவனம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இத்தகைய பெரும் சந்தைப்பங்கைக் கொண்டுள்ள போன்பே நிறுவனம் , தனது பயனர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குப் புதிய கட்டண நடைமுறை ஒன்றை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி , போன்பே செயலியில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் PhonePe Wallet கணக்குகளுக்கு 100 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்பே செயலியில் நேரடியாக வங்கியிலிருந்து பணம் அனுப்புவது ஒருபுறமிருக்க பயனர்கள் தங்களின் போன்பே வேலட் கணக்கில் பணத்தைச் சேமித்து வைத்து அதன் மூலமும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில பயனர்கள் இந்த வேலட் கணக்கைத் தொடங்கி சில காலம் பயன்படுத்திய பிறகு நீண்ட நாட்களாக எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இவ்வாறாக தொடர்ந்து 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் முழுவதும் எந்தவொரு செயல்பாடும் இன்றி பயன்படுத்தப்படாமல் இருக்கும் போன்பே வேலட் கணக்குகள் ‘செயலற்ற கணக்குகளாகக்’ கருதப்படும். அவ்வாறு முடங்கியிருக்கும் வேலட் கணக்குகளில் இருந்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை 100 ரூபாய் வீதம் அபராதக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று போன்பே நிறுவனம் விளக்கியுள்ளது.
அதேவேளையில் இந்த புதிய விதிமுறை அனைத்து போன்பே பயனர்களுக்கும் பொருந்தாது என்பதையும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. போன்பே வேலட் கணக்கைப் பயன்படுத்தாமல் தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக UPI மூலம் மட்டுமே வழக்கம்போல் பணம் அனுப்புபவர்களுக்கு இந்த எந்தவொரு கட்டணமும் விதிக்கப்படாது. அவர்கள் வழக்கம் போலக் கட்டணமில்லாச் சேவையைப் பெற முடியும்.
மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தப்படாத வேலட் கணக்கில் 100 ரூபாய்க்கும் குறைவாகவே பணம் இருக்கும் பட்சத்தில் அந்த கணக்கிலிருந்து இருக்கும் தொகை மட்டுமே எடுக்கப்படும் என்றும் போன்பே நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களில் செயலற்ற கணக்குகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.







