சிறப்பு செய்தி , ஜூன் 30: சர்வதேச பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் உலகச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் நேரடி எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்திய நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் கைவசம் உள்ள பழைய தங்க நகைகளை மிகத் தீவிரமாக விற்பனை செய்து ரொக்கப் பணமாக மாற்றி வருவது சந்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பொன் விற்பனையாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய நுகர்வோரால் சுமார் 50 டன் பழைய தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் என்ற மிக அதிரடியான உயர்வாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் புதிய உச்சங்களைத் தொட்டு ஒரு சவரன் தங்கம் சுமார் 1,44,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் தற்போதைய உலகளாவிய பொருளாதாரக் காரணி நகர்வுகளால் இதன் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விலை வீழ்ச்சி மேலும் தொடர்ந்து ஒரு சவரன் 96,000 ரூபாய் வரை சரிவடைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் சந்தைக் கணிப்புகளே பொதுமக்கள் தங்களின் நகைகளை அவசரமாக விற்பனை செய்ய முதன்மைக் காரணமாக மாறியுள்ளது.
தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி ! சவரனுக்கு ₹2,160 சரிந்தது தங்கம்!
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் நிலவும் தற்போதைய சூழல் இந்த விலை மாற்றத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் படிப்படியாகத் தணிந்து வருவதும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் உலக முதலீட்டாளர்களைத் தங்கத்தின் மீதான முதலீடுகளில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய நுகர்வோரும் தங்களிடம் உள்ள பழைய நகைகளைப் புதிய ஆபரணங்களாக மாற்றுவதைத் தவிர்த்துவிட்டு தற்போதைய ஓரளவிலான நல்ல விலையிலேயே அவற்றை விற்றுப் பணமாகத் தக்க வைத்துக் கொள்ள முற்படுகின்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் முடிவானது உள்நாட்டில் தங்க மறுசுழற்சித் துறை மிகப்பெரிய அளவில் வேகம் எடுக்க வழிவகுத்துள்ளது. வீடுகளில் பயன்பாடின்றி முடங்கிக் கிடந்த பழைய நகைகள் தற்போது மறுசுழற்சி முறையில் சந்தைக்குள் பெருமளவில் வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா மேற்கொள்ளும் தங்க இறக்குமதித் தேவை ஓரளவுக்குக் குறையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இதனை ஒரு சாதாரணச் சந்தை விலைமாற்றமாகப் பார்த்தாலும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களிடம் இருக்கும் சேமிப்பின் மதிப்பு மேலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட்டு வருவதையே தற்போதைய சந்தை நிலவரங்கள் காட்டுகின்றன.





