
திருத்தணி\ , ஏப்ரல் 8: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பிரசாரத்தால் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யகுமார் உட்பட 11 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படைகளும் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ALso : விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் பிரச்சாரம் – முழு அட்டவணை வெளியீடு
இந்நிலையில் உரிய அதிகாரப்பூர்வ அனுமதி பெறாமல் பொது இடங்களில் கூட்டம் கூட்டியதாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய வேட்பாளரான சத்யகுமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்த அனுமதியற்ற பிரசாரம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்யகுமார் மற்றும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட மேலும் 10 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
தேர்தல் காலகட்டத்தில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பொதுக்கூட்டங்கள், சாலை ஊர்வலங்கள் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ளும் போது அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதே தற்போதைய வழக்கின் பின்னணியாக உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட டிவிகே நிர்வாகிகளிடம் காவல்துறை தரப்பில் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் பாயலாம் எனத் தெரிகிறது.







