
திருநெல்வேலி , ஏப்ரல் 8: தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் கேந்திரமாக விளங்கும் திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் தென் தமிழ்நாட்டில் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அவரது ஆதரவாளர்களும் ரசிகர்களும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பிரச்சார மேடை வரை தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருநெல்வேலி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பிரச்சார நிகழ்வில் பங்கேற்க ஒரே இடத்தில் திரண்டனர்.
அனுமதி இன்றி பிரசாரம்: TVK வேட்பாளர் சத்யகுமார் உள்ளிட்ட 10 பேருக்கு FIR பதிவு
தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. பாரம்பரியமிக்க திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை இலக்காகக் கொண்டு இந்த பிரச்சார வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் தங்களுக்கு சாதகமாக மாற்ற TVK முயன்று வருகிறது. சமீபத்திய அரசியல் மதிப்பீடுகளும் கள ஆய்வுகளும் கூட இளைஞர்களிடையே விஜய்க்கு கணிசமான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இது திமுக மற்றும் அதிமுக போன்ற முதன்மை கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் .
நெல்லை பிரச்சாரத்தின் போது திரண்டிருந்த கூட்டத்தின் உற்சாகம் மற்றும் கொண்டாட்ட மனநிலையை அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் “Vibe Mode” என்ற சொல்லாடலுடன் பரப்பி வருகின்றனர். இணையதளங்களில் இந்த பிரச்சாரக் காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன. வெறும் அரசியல் கூட்டமாக இல்லாமல் பொதுமக்களுடன் ஒரு நேரடித் தொடர்பை (Mass connect) உருவாக்கும் வகையில் இந்த பிரச்சார மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது. நெல்லையை மையமாக வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த அரசியல் நகர்வு தென் மாவட்டங்கள் முழுவதிலும் கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட தொடக்கமாகவே கருதப்படுகிறது.
இந்த நெல்லை பிரச்சாரத்தைத் தொடர்ந்து தென் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் விஜய் தனது அடுத்தகட்ட தேர்தல் சுற்றுப்பயணங்களை தீவிரமாக மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் களம் மிக நெருங்கி வரும் வேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அதிரடிப் பிரச்சாரங்கள் மற்றும் வியூகங்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் சமன்பாடுகளையும் மாற்றி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





