
நெல்லை , ஏப்ரல் 8: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தனது முக்கிய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக திட்டமிட்டபடி இன்று மதியம் 1 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட கேடிசி நகர் பகுதியில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள காப்பர் லீஃப் ஹோட்டல் அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தேர்தல் உரையாற்றுகிறார். இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்றே பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்குச் சென்று மேடை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம் எடப்பாடியில் TVKக்கு அதிர்ச்சி: வேட்பாளர் காணாமல் போனதால் மனு நிராகரம்
இந்த பொதுக்கூட்டத்தை நிறைவு செய்த பிறகு பிற்பகல் 3 மணியளவில் நடிகர் விஜயின் தேர்தல் சிறப்பு ரோட்ஷோ தொடங்குகிறது. தாழையூத்து பகுதியில் தொடங்கி தச்சநல்லூர், வண்ணார்பேட்டை மற்றும் நகரின் முக்கிய மார்க்கெட் பகுதிகள் வழியாக தூத்துக்குடி நகருக்குள் அவரது வாகனப் பேரணி பிரவேசிக்கிறது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மைல் பகுதியிலிருந்து விவிடி சிக்னல் வரை இந்த ரோட்ஷோ நீடிக்கிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கேடிசி நகர் நோக்கி திரும்பும் வகையில் ஒட்டுமொத்த பயணப் பாதையும் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு திருநெல்வேலி மாநகரக் காவல்துறை இந்த பிரச்சாரத்திற்கு 51 கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கவும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றில் கட்சியின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதற்கும் தங்களது இருப்பை ஆழமாகப் பதிவு செய்வதற்கும் இந்த நெல்லைப் பயணம் தவெக தரப்பிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பாளையங்கோட்டை மற்றும் நெல்லை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருமளவிலான இளைஞர்களும் புதிய வாக்காளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி கட்டத் தேர்தலை நோக்கி நகரும் வேளையில் விஜயின் இந்த நேரடி களப்பணி தென் தமிழக அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.





