
Nellai , May 12 : நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணி குறைபாடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர் ஜெகநாதன் பழுதான குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நெல்லை மாநகராட்சியின் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் தொடங்கியது. வழக்கமாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இந்த கூட்டம், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற முதல் நாளிலேயே பல்வேறு குடிமக்கள் பிரச்சனைகள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டதால் மாநகராட்சி அலுவலக வளாகம் பரபரப்பாக மாறியது.
துணை மேயர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி 5-வது வார்டை சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது வார்டில் நீண்ட நாட்களாக நிலவி வரும் தூய்மை பணி சீர்கேடு, வடிகால் பராமரிப்பு பிரச்சனை மற்றும் குப்பை அகற்றும் பணிகளில் ஏற்பட்ட தடைகள் குறித்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களும் கவுன்சிலரும், பழுதடைந்த நிலையில் இருந்த குப்பை அள்ளும் வண்டிக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் மாநகராட்சி பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் மூலம், “தூய்மை பணி முறையாக நடைபெறவில்லை”, “அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை”, “வார்டு மக்கள் சுகாதார அச்சத்தில் வாழ்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர்.
200-க்கும் மேற்பட்ட தெருக்கள்.. ஆனால் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை
போராட்டத்திற்கு பின்னர் மாநகராட்சியிடம் வழங்கப்பட்ட மனுவில் பல முக்கிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. அதில், “5-வது வார்டில் 200-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஆனால் இந்தப் பகுதியில் வெறும் 15 துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தினசரி சுமார் 5 பேர் விடுமுறை எடுப்பதால், நடைமுறையில் 10 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரு தூய்மை, குப்பை அகற்றுதல், வடிகால் சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை பணிகளே முழுமையாக நடைபெறவில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், வடிகால் மற்றும் ஓடை சுத்தம் செய்வதற்காக குழு பணியாளர்கள் மற்றும் நிரந்தர தூய்மை தொழிலாளர்கள் என 7 பேர் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது சில அதிகாரிகள் அந்த தொழிலாளர்களை வேறு பகுதிகளுக்கு மாற்றி அனுப்பிவிடுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 5-வது வார்டில் உள்ள ஓடைகள் சுத்தம் செய்யப்படாமலும், தேங்கிய மண் அகற்றப்படாமலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மழைக்காலம் நெருங்கி வரும் சூழலில் இந்த நிலை தொடர்ந்தால், சுகாதார பாதிப்புகளும் கொசு தொல்லைகளும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பழுதான குப்பை வண்டி.. “கோவைக்கு அனுப்பியுள்ளோம்” என அதிகாரிகள் விளக்கம்
போராட்டத்தில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட மற்றொரு பிரச்சனை குப்பை அள்ளும் வண்டி தொடர்பானது. வார்டில் பயன்படுத்தப்பட்டு வந்த குப்பை வண்டி பழுதடைந்ததால் அதை சரி செய்வதற்காக கோவைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததாக மக்கள் கூறியுள்ளனர்.
“வண்டி திரும்ப வந்த பிறகே மண் அள்ளும் பணி மற்றும் குப்பை அகற்றும் பணி முழுமையாக செய்ய முடியும்” என அதிகாரிகள் கூறுவதாகவும், ஆனால் இதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனுடன், வார்டுக்கு வழங்கப்பட்டிருந்த 2 பேட்டரி வண்டிகள் மற்றும் 5 சைக்கிள்களில் தற்போது 2 சைக்கிள்கள் பயன்பாட்டில் இல்லையெனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது” – உடனடி நடவடிக்கை கோரி மக்கள் வலியுறுத்தல்
தற்போது 5-வது வார்டின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருப்பதுடன், ஓடைகள் பராமரிக்கப்படாத காரணத்தால் மக்கள் சுகாதாரமற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எனவே, கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமித்தல், பழுதடைந்த வாகனங்களை உடனடியாக சரிசெய்தல், வடிகால் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தனி மனு ஒன்றை அளித்தனர். அதில், பாளை முருகன் குறிச்சி கதீட்ரல் பேராலயம் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், இதுவரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. எனவே, நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தி அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குடிநீரில் சாக்கடை கலப்பு.. 60 ஆண்டுகள் பழமையான பைப்புகளை மாற்ற கோரிக்கை
மேலும், நெல்லை மாநகராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன் அளித்த மனுவிலும் முக்கியமான குடிநீர் பிரச்சனை முன்வைக்கப்பட்டது. வண்ணார்ப்பேட்டை வெற்றி வேலடி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை பழுதடைந்ததால் சாக்கடை கலந்த தண்ணீர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய குழாய்களை உடனடியாக மாற்றி தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





