ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை அதிரடியாகக் கைப்பற்றிய அமெரிக்கா: உலகளவில் பதற்றம்

ஈரான் , ஏப்ரல் 20 : ஓமான் வளைகுடா அருகே சர்வதேச கடல் வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் இந்த நேரடி ராணுவ நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு உலகளாவிய பொருளாதாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் அதிநவீன ‘யுஎஸ்எஸ் ஸ்புரூன்ஸ்’ (USS Spruance) என்ற டிஸ்ட்ராயர் ரகப் போர் கப்பல், அந்தப் வழியாக வந்த ‘டூஸ்கா’ (Touska) என்ற ஈரானிய சரக்குக் கப்பலை வழிமறித்தது. அமெரிக்கப் படைகள் அந்தக் கப்பலை நிறுத்தும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் ஈரானியக் கப்பல் தொடர்ந்து பயணிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்கக் கடற்படையினர் டூஸ்கா கப்பலின் எஞ்சின் பகுதியைக் குறிவைத்து அதிரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் எஞ்சின் செயலிழந்ததை அடுத்து அமெரிக்க ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் டூஸ்கா கப்பலுக்குள் நுழைந்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Also Read : OTT தளத்தில் மீண்டும் ‘The Big Picture’ – நடிகர் பரத் புதிய தொகுப்பாளர்!

கைப்பற்றப்பட்ட இந்த டூஸ்கா கப்பலானது ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தின் தடைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஈரான் நாட்டுத் துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்கா தீவிரமான கடல்வழி மறுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களின் இந்த சர்வதேச கடல்வழித் தடையை மீறி பயணிக்க முயன்ற காரணத்தினாலேயே ஈரானியக் கப்பல் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஈரான் அரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் இந்தச் செயல் அப்பட்டமான சர்வதேச கடல் சட்ட மீறல் என்றும் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தங்களின் கப்பல் சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டதற்கு உரிய முறையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் ராணுவத் தரப்பு எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி ராணுவ மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஏற்கனவே பதற்றமான உறவை மேலும் மோசமடையச் செய்துள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணைப் பகுதி வழியாகவே நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு சிறிய ராணுவ மோதலும் உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சுமுகமற்ற சூழலைத் தணிக்க சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வேளையில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *