
விருதுநகர் , ஏப்ரல் 20 : விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தொழிலாளர் பாதுகாப்பு கட்டமைப்பையும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. விருதுநகர் அருகேயுள்ள கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் குறைந்தது 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் வழக்கத்தை விட அதிக தொழிலாளர்கள் பணியில் இருந்ததும் தீ விபத்து ஏற்பட்டவுடன் அது மின்னல் வேகத்தில் பரவியதும் மீட்புப் பணிகளில் பெரும் முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது.
Also : ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை அதிரடியாகக் கைப்பற்றிய அமெரிக்கா: உலகளவில் பதற்றம்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோருக்கு ₹20 லட்சம் நிரந்தர இழப்பீடு எப்போது?
இந்த கோர விபத்து குறித்து வருவாய்த்துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அறையில் வேதிப்பொருட்களின் வீரியம் கருதி அதிகபட்சமாக 4 தொழிலாளர்கள் மட்டுமே அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறையாகும். ஆனால் லாப நோக்கோடும் அப்பட்டமான அலட்சியத்தோடும் அந்த ஒரு சிறிய அறைக்குள் 20 தொழிலாளர்கள் மிக நெருக்கமாக அமரவைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான கூட்ட நெரிசல் காரணமாகவே வெடிப்பு ஏற்பட்ட சில நொடிகளிலேயே அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பிக்க வழியின்றி சிக்கிக்கொண்டனர் என்றும் இதனால் தான் பாதிப்பின் தீவிரம் பல மடங்கு அதிகரித்தது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகள் இந்தியாவின் முதன்மை பட்டாசு உற்பத்தி கேந்திரங்களாக விளங்கும் வேளையில் அங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பியே அமைந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு விதிகள் அப்பட்டமாக மீறப்படுவதும் அதைத் தொடர்ந்து விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவதும் இங்கு தொடர்கதையாகி வருகிறது. முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளின் போதெல்லாம் இடப்பற்றாக்குறை, அதிக வேலை அழுத்தம், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டாலும் கள யதார்த்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த கட்டனார்பட்டி விபத்து நிரூபிக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் மாவட்ட நிர்வாகமும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் உரிமையாளர்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு அப்பாவி தொழிலாளர்களின் உயிரோடு விளையாடிய ஆலை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது சட்டப்படியான கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் அன்றாட பிழைப்பிற்காக வேலைக்கு வரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் அவர்களின் குடும்பங்கள் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பட்டாசு தொழில் இப்பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்தாலும் முறையான கண்காணிப்பு இல்லாததால் அது ஒவ்வொரு நாளும் உயிருக்கு ஆபத்தான ஒரு தொழிலாகவே நீடிக்கிறது. பாதுகாப்பு விதிகளை அரசு இயந்திரம் மிகக் கடுமையாக அமல்படுத்தி தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளாதவரை இத்தகைய அவல மரணங்களை தடுக்க முடியாது என தொழில்துறை நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.







