மருத்துவம் , ஏப்ரல் 17 :- சுமார் 67 ஆண்டுகளாக அறிவியல் உலகில் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்டு வந்த ஒரு முக்கிய வேதியியல் கோட்பாடு தற்போது உண்மையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் வைட்டமின் பி1 (Thiamine) எனப்படும் உயிர்ச்சத்து செயல்படும் விதம் குறித்து 1958ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு (UC Riverside) விஞ்ஞானிகள் தற்போது ஆய்வுப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரியல் மற்றும் வேதியியல் துறைகளில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பு உலக அளவில் மருந்து தயாரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பங்களில் முற்றிலும் புதியதொரு பாதையைத் திறந்துவிட்டுள்ளது.
கடந்த 1958ஆம் ஆண்டு ரொனால்ட் ப்ரெஸ்லோ (Ronald Breslow) என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி ஒரு கோட்பாட்டை வெளியிட்டார். வைட்டமின் பி1 மனித உடலில் மிக முக்கிய வேதியியல் செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் போது அது ‘கார்பீன்’ (carbene) எனப்படும் அதிவேகமாகச் செயல்படும் ஒரு விசித்திர மூலக்கூறாக மாறுகிறது என்பதே அவரது வாதம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இருந்த அறிவியல் சூழலில் இந்த கருத்து பலராலும் ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை என்று கூறி நிராகரிக்கப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம் கார்பீன் மூலக்கூறின் நிலைத்தன்மையற்ற தன்மைதான்.
Also : வைட்டமின் டி அளவுக்கு மீறினால் ஆபத்து: புதிய ஆய்வு எச்சரிக்கை
வேதியியல் விதிகளின்படி கார்பீன் என்பது மிகக் குறுகிய காலமே நீடிக்கக்கூடிய ஒரு தற்காலிக அமைப்பு ஆகும். குறிப்பாக அது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும் அடுத்த கணமே உடைந்து சிதைந்து போகும் இயல்புடையது. மனித உடலோ பெரும்பகுதி தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது என்பதால் தண்ணீருக்குள் கார்பீன் உருவாகி நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை என விஞ்ஞானிகள் கருதினர். இதன் காரணமாகவே ப்ரெஸ்லோவின் இந்த புரட்சிகரமான கோட்பாடு எந்தவித ஆதாரமும் இல்லாமல் பல தசாப்தங்களாக நிரூபிக்கப்படாமலேயே முடங்கிக் கிடந்தது.
இந்த சூழலில்தான் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு சாதனையைச் நிகழ்த்தியுள்ளனர். தண்ணீரில் ஒரு நொடிகூட நிலைத்திருக்க முடியாது என நம்பப்பட்ட அந்த கார்பீன் மூலக்கூறை அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியதோடு மட்டுமன்றி அதைத் தனியாகப் பிரித்து பாதுகாத்தும் காட்டியுள்ளனர். சாதாரணமாகச் சிதைந்துபோகும் இந்த மூலக்கூறு இவர்களின் புதிய தொழில்நுட்ப முறை மூலம் பல மாதங்கள் தங்களின் ஆய்வகத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நிலைத்திருந்ததாக விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் அறிவித்துள்ளனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி குறித்துப் பேசியுள்ள முதன்மை ஆராய்ச்சியாளர் வின்சென்ட் லவல்லோ இந்த யோசனை ஆரம்பத்தில் முற்றிலும் சாத்தியமற்றதாகவே பார்க்கப்பட்டது என்றும் ஆனால் ப்ரெஸ்லோ அன்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைத் தங்களின் தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
அறிவியல் உலகம் இத்தனை காலம் அசாத்தியம் என்று கைவிட்ட இந்த இலக்கை விஞ்ஞானிகள் ஒரு விநோதமான பாதுகாப்பு கவச முறை மூலம் சாத்தியமாக்கியுள்ளனர். கார்பீன் மூலக்கூறைச் சுற்றி அணு அளவிலான ஒரு சிறப்புப் பாதுகாப்புக் கட்டமைப்பை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். இந்த அணு கவசம் கார்பீன் மூலக்கூறு தண்ணீருடன் நேரடியாகவோ அல்லது உடனடியாகவோ வினைபுரிவதைத் தடுத்து நிறுத்தியது. இந்த அணுக்களாலான தற்காப்புப் அரணின் உதவியால் கார்பீன் நீண்ட நேரம் சிதையாமல் பாதுகாக்கப்பட்டதுடன் அணு அளவில் அதன் அசல் அமைப்பை விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக ஆய்வு செய்யவும் இது வழிவகை செய்துள்ளது.
இந்த விண்வெளி யுகக் கண்டுபிடிப்பு வெறும் ஒரு பழைய கோட்பாட்டைப் புத்தகத்தில் எழுதி வைப்பதோடு நின்றுவிடப் போவதில்லை. இதன் பின்னணியில் உலகளாவிய மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஒளிந்துள்ளன. தற்கால மருந்து தயாரிப்புத் துறையில் பெரும்பாலான உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய நச்சுத்தன்மை கொண்ட கரிம கரைப்பான்கள் (organic solvents) அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் தற்போதைய புதிய கண்டுபிடிப்பின் மூலம் தண்ணீரை மட்டுமே முதன்மை கரைப்பானாகப் பயன்படுத்தி மனித உடலுக்குத் தேவையான பாதுகாப்பான மருந்துகளை மிக மலிவான செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
இவற்றுடன் தண்ணீர் என்பது இயற்கைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத மிகச் சிறந்த இயற்கை கரைப்பான் என்பதால் வேதியியல் கழிவுகளின்றி மருந்துகளை உருவாக்கும் பசுமை வேதியியல் (Green Chemistry) தொழில்நுட்பம் இனிவரும் காலங்களில் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வேகமெடுக்கும். மேலும் மனித உடலின் செல்களுக்குள் மிக நுண்ணிய அளவில் நடைபெறும் பல்வேறு இயற்கை வேதியியல் செயல்முறைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வு அடித்தளமிட்டுள்ளது.








