
சென்னை , ஏப்ரல் 17 :- தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மக்கள் தொடர்பு முறை அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் தனது ஆதரவாளர்களுக்கும் குறிப்பாக பெண் வாக்காளர்களுக்கும் ஒரு புதிய வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமான வீட்டு வாசல் கோலத்துடன் தங்களின் தேர்தல் சின்னமான விசிலையும் இணைத்து ‘விசில் கோலம்’ வரையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது வெறும் பிரச்சாரமல்லாமல் அமைதியான முறையில் தங்களின் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தும் ஒரு வலுவான மக்கள் இயக்கமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Also Read : தொகுதி மறுவரையறை அரசியல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: சசி தரூர் கடும் எச்சரிக்கை
ரூபாய் சரிவைத் தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி: டாலர் சந்தையில் முக்கிய கட்டுப்பாடு
தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்தும் வீடு வீடான பிரச்சாரம், பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் எனப் பல வழிகளில் களம் கண்டு வருகின்றன. இதற்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நேரடிப் பங்களிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்ட ஒரு புதிய பிரச்சார மாதிரியை கையில் எடுத்துள்ளது. தனது கட்சியை ஒரு அரசியல் கட்சியாகக் கடந்து ‘மக்கள் இயக்கம்’ என்றே தொடர்ந்து அழைத்து வரும் விஜய், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே இந்த விசில் கோல உத்தி பார்க்கப்படுகிறது.
இந்த புதிய உத்தி தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளில் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் இது சமூக ஊடக விவாதங்களை சற்றே வேகமாகத் தூண்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே விஜய்யின் ரசிகர்கள் விசில் சின்னத்தை தங்களின் முக்கிய அடையாளமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.







