நெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக பொதுமக்களின் அன்றாடப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சாலைகளின் தற்போதைய நிலை விடுபட்ட பகுதிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பது ஆகியவற்றுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 8 வெவ்வேறு அரசுத் துறைகளின் கீழ் மொத்தம் 519 பயனாளிகளுக்கு 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மரியவில்சன் வழங்கினார்.
மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் தனியாக விவாதிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் போதைப்பொருட்களை மாவட்டத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கத் தேவையான கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கியத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதப் புழக்கங்களைத் தடுக்கக் காவல் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் எதிர்கால வறட்சி மற்றும் மாவட்டத்தின் தண்ணீர் தேவையைச் சமாளிக்கும் பொருட்டு தாமிரபரணி ஆறு மாவட்டத்தில் உள்ள பிற அணைகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாருவது குறித்தும் கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னும் 4 முதல் 5 மாதங்களுக்குள் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இந்த தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் தங்குதடையின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது பாளையங்கோட்டை பகுதியில் சாலைச் சரியில்லாத காரணத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் மரியவில்சன் இச்சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாகத் தற்போது முழுமையான ஆய்வு செய்யத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் தகுந்த பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அரசின் இதர வாக்குறுதிகள் வெள்ளை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் புதிய அரசு பொறுப்பேற்று 40 நாட்களே ஆகியுள்ள நிலையைச் சுட்டிக்காட்டினார். தற்போது அனைத்துத் துறைகளின் முதற்கட்ட அறிக்கைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த விரிவான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தமிழக முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.







