
புது டெல்லி , ஏப்ரல் 7 : மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஈரான் தொடர்பான மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது . இந்த விநியோகச் சிக்கல்களால் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு சில பகுதிகளில் அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த கிராமங்களுக்குத் திரும்பும் நிலையும் உருவாகியுள்ளது. இத்தகைய அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இடம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்கும் நோக்கிலும் மத்திய அரசு ஒரு முக்கிய அவசர முடிவை எடுத்துள்ளது.
இதன்படி விநியோகச் சந்தையில் ‘சோட்டு’ என்று பரவலாக அழைக்கப்படும் ஐந்து கிலோ எடைக் கொண்ட ‘ப்ரீ டிரேட் எல்பிஜி’ (FTL) சிலிண்டர்களின் தினசரி ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக இரட்டிப்பாக்கியுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி இந்த கூடுதல் ஒதுக்கீடு முழுமையாக இடம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடைவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வழங்கப்பட்ட சராசரி தினசரி விநியோக அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய எண்ணிக்கைக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நடைமுறையில் இருக்கும் இருபது சதவீத உச்சவரம்பை மீறி இந்த கூடுதல் எல்பிஜி சிலிண்டர்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான எரிவாயு இணைப்புகளைப் பெறுவதற்கு நிரந்தர முகவரிச் சான்றுகள் கட்டாயமாக உள்ளதால் சொந்த ஊரை விட்டுப் பிழைப்பு தேடி வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் தினக்கூலிகளும் சமையல் எரிவாயுவை எளிதில் பெற முடியாமல் தவித்து வந்தனர். இந்தத் தேவையைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கும் அவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நுகர்வோர் சிக்கலைத் தீர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்திற்கு இப்போது எவ்வித முகவரிச் சான்றும் தேவையில்லை. ஏதேனும் ஒரு முறையான அடையாள அட்டையை மட்டும் காண்பித்து எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் இருந்து நேரடியாகவே இவற்றை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய அரசின் இந்த அவசர நடவடிக்கை சென்னை கோவை மற்றும் திருப்பூர் போன்ற முன்னணித் தொழிற்பேட்டை நகரங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில மற்றும் உள்மாநில இடம்பெயர் தொழிலாளர்கள் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர். தற்போதைய புதிய உத்தரவின் மூலம் அவர்களுக்குக் குறைந்த விலையில் சிறிய சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படுவதால் அவர்களின் உணவுப் பாதுகாப்பு மேம்படும். அத்துடன் தொழிற்சாலைகளில் தங்கி வேலை செய்யும் பணியாளர்களின் தங்குதன்மை அதிகரிப்பதுடன் சிறு தொழில்கள் மற்றும் உற்பத்தித் துறையின் சீரான இயக்கத்திற்கும் இது மறைமுகப் பக்கபலமாக அமையும்.
அரசின் இந்த முடிவை எல்பிஜி விநியோக சங்க அமைப்புகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து விநியோக சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில் நிரந்தர முகவரி இல்லாததால் தவித்த அடித்தட்டு மற்றும் பலவீனமான சமூகத்தினருக்கு இதுவொரு மிகச்சிறந்த முன்னேற்றமான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அவசரக் காலத் திட்டத்தின் கீழ் அரசு எண்ணெய் நிறுவனங்கள் மூலமாகவே சிலிண்டர்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படவுள்ளன. மேலும் கள்ளச்சந்தையில் இந்த சிலிண்டர்கள் விற்கப்படுவதைத் தடுக்க மாநில அரசுகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையற்ற வகையில் எல்பிஜி முன்பதிவுகளைச் செய்து இருப்பு வைக்க வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.







