
டெல்லி , ஏப்ரல் 7: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் எது என்பதில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வந்த அரசியல் நகர்வுகளுக்கும் நிர்வாகக் குழப்பங்களுக்கும் நாடாளுமன்றம் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மாநிலத்தின் நிரந்தர மற்றும் ஒரே தலைநகரமாக அமராவதிக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) சட்டம் 2026’ (Andhra Pradesh Reorganisation Amendment Bill 2026) இரு அவைகளிலும் எவ்வித தடையுமின்றி ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, 2014ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது உருவான தற்காலிக ஏற்பாடுகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகின்றன. கடந்த 2024 ஜூன் 2ஆம் தேதியுடன் ஹைதராபாத் நகரம் ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக நீடிக்கும் காலம் நிறைவடைந்த நிலையில், இந்த புதிய சட்ட அங்கீகாரம் 2024 ஜூன் 2 முதலே பின்னோக்கி அமலுக்கு வரும் வகையில் (Retrospective effect) வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
கடந்த பத்தாண்டுகளாக ஆந்திர அரசியலையும், அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்தையும் உலுக்கி எடுத்த மிக முக்கிய விவாதப்பொருள் தலைநகர விவகாரம்தான். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விசாகப்பட்டினம் (நிர்வாகத் தலைநகரம்), அமராவதி (சட்டமன்றத் தலைநகரம்) மற்றும் கர்னூல் (நீதிமன்றத் தலைநகரம்) ஆகிய மூன்று தலைநகரத் திட்டம் பெரும் சர்ச்சைகளையும் முதலீட்டுத் தேக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்ற வழக்குகள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் என முடங்கிக் கிடந்த இந்த விவகாரத்திற்கு தற்போதைய சட்டத் திருத்தம் மூலம் முழுமையாகத் திரை விழுந்துள்ளது. ஆந்திராவிற்கு இனி அமராவதி மட்டுமே ஒரே தலைநகரம் என்பது நாடாளுமன்ற முத்திரை மூலம் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இந்த அதிரடி முடிவை ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு வர்ணித்துள்ளார். தலைநகரம் குறித்த சட்டபூர்வமான இந்த தெளிவு, ஆந்திராவின் பொருளாதாரப் பாதையை அடுத்த கட்டத்திற்கு மாற்றப் போகிறது என்றும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகச்சிறந்த சூழலை இது உருவாக்கும் என்றும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.







