
வாஷிங்டன் , ஏப்ரல் 4 : விண்வெளி ஆராய்ச்சியில் தற்போதைய பிரபஞ்ச உருவாக்கக் கோட்பாடுகளையே தலைகீழாக மாற்றும் வகையிலான புதிய கண்டுபிடிப்பு ஒன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழனின் (Jupiter) அளவுக்குச் சமமான ,ஆனால் விஞ்ஞானிகளால் “விலக்கப்பட்ட கிரகம்” (Forbidden planet) என்று வர்ணிக்கப்படும் ‘TOI-5205b’ என்ற புதிய அந்நிய கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் இருப்பு ,விண்வெளி உருவாக்கக் கொள்கைகளை விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 280 ஒளியாண்டுகள் (Light-years) தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகம் ,‘ரெட் ட்வார்ஃப்’ (Red dwarf) எனப்படும் மிகவும் சிறிய அளவிலான குளிர்ந்த நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருகிறது. பொதுவாக ,இத்தகைய சிறிய நட்சத்திரங்களைச் சுற்றி வியாழன் போன்ற பிரம்மாண்டமான வாயு கிரகங்கள் (Gas giants) உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே விண்வெளி அறிவியலின் நீண்டகால நம்பிக்கையாக இருந்து வந்தது. ஆனால் ,அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் இந்த ‘TOI-5205b’ கிரகம் அமைந்துள்ளது.
அதிநவீன ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு ,சர்வதேச விஞ்ஞானிகள் குழு இந்த கிரகத்தின் வளிமண்டலத்தை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் ,பொதுவாக வியாழன் போன்ற பெரிய கிரகங்களில் காணப்படும் கார்பன் மற்றும் ஆக்சிஜன் போன்ற கனமான தனிமங்கள் (Heavy elements) இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்குப் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நட்சத்திரம் உருவாகும்போது விண்வெளியில் மீதமிருக்கும் தூசி மற்றும் வாயுக்களின் திரட்சியைக் கொண்டே கிரகங்கள் உருவாகின்றன என்பது அறிவியல் விதி. ஆனால் ,இந்த குறிப்பிட்ட சிறிய நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ,வியாழன் போன்ற ஒரு பிரம்மாண்ட கிரகம் உருவாவதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. போதிய மூலப்பொருட்கள் இல்லாத சூழலிலும் இந்த கிரகம் எப்படி உருவானது என்ற விடை தெரியாத புதிரே ,இதற்கு “விலக்கப்பட்ட கிரகம்” என்ற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
தற்போதைய கிரக உருவாக்க மாதிரிகளுக்கு (Planetary formation models) பெரும் சவாலாக அமைந்துள்ள இக்கண்டுபிடிப்பு ,எதிர்காலத்தில் விண்வெளி இயற்பியலில் புதிய கோட்பாடுகள் உருவாவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச அளவிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகளும் இணைந்து தரவுகளைப் பகுப்பாய்வு செய்து முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது உள்நாட்டு விண்வெளி ஆராய்ச்சித் துறைக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கப்படுகிறது.







