
Chennai, May 12: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது. 54 பேர் சிறையில், 264 படகுகள் பறிமுதல். விடுவிக்க CM ஜோசப் விஜய் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இன்று (12.05.2026) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்கவும் தேவையான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Read More : மண்ணடியில் IUML அலுவலகத்திற்கு நேரில் சென்ற CM விஜய்.. தொடரும் அரசியல் சந்திப்புகள்
கைது செய்யப்பட்ட மீனவர்களின் விவரம் : இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த திருவாளர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.05.2026 அன்று நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.இவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சர்வதேச கடல் எல்லை (IMBL – International Maritime Boundary Line) கடந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த புதிய கைது சம்பவம் மட்டுமல்லாமல், தற்போதைய நிலவரப்படி இலங்கை சிறையில் ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்பதும் கவலையை அதிகரிக்கிறது. மேலும், 264 மீன்பிடி படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை வாழ் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை அதிகாரிகளுடன் உடனடி தொடர்பு கொண்டு அனைத்து தூதரக வழிகளையும் பயன்படுத்தி: கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுவிக்க
அவர்களின் படகுகளை மீட்க ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூதரக நடவடிக்கைகளுக்கான கோரிக்கை
முதலமைச்சரின் கடிதத்தில், இந்த பிரச்சனை ஒரு மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்சனையாகக் கருதி உடனடி தூதரக நடவடிக்கை தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா–இலங்கை இடையிலான மீனவர் பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருவதால், நிலையான தீர்வு அவசியம் என்றும் , இந்த சம்பவம் வெறும் கைது நடவடிக்கையாக மட்டுமல்ல, இந்தியா–இலங்கை இடையிலான கடல் எல்லை பிரச்சனையின் தொடர்ச்சியான பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், மண்டபம் போன்ற பகுதிகளில் வாழும் மீனவர்கள், பாரம்பரிய மீன்பிடி முறையை நம்பி வாழ்கின்றனர். ஆனால் IMBL எல்லை பிரச்சனை காரணமாக அவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.







