நெல்லை  : பெட்ரோல், டீசல் விலை உடனே குறைய வேண்டும் ! ‘முதல்வரை குறை சொல்ல முடியாது; 30 நாட்கள்தான் ஆனது’ – விக்ரமராஜா பரபரப்பு பேட்டி!

நெல்லை  ,ஜூன் 17: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,மத்திய ,மாநில அரசுகளுக்கு வணிகர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் விக்கிரமராஜா பேசியதாவது:

தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு கணிசமாகக் குறைக்க வேண்டும். எரிபொருள் விலை உயர்வால் சந்தையில் ஏற்படும் விளைவுகளுக்கும் ,விலை ஏற்றத்திற்கும் வியாபாரிகள் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கும் ,பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும் வணிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலன் கருதி ,எரிபொருட்களின் விலையை விரைவாகக் குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு: கை ,கால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு சிறப்பான முறையில் செயல்பட்டால் மட்டுமே ,அது பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் சாதகமான சூழலை உருவாக்கும். அந்த நல்ல நோக்கத்திற்காகவே பொதுமக்கள் தங்களது வாக்குளைப் பதிவு செய்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே ,மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரசு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. வணிகர்களின் பாதுகாப்பிற்காகத் தனிச் சிறப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்த இருக்கிறோம்.

அண்மைக்காலமாக நடைபெறும் பாலியல் குற்றங்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறும் காலங்களில் ,காவல்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் ,தற்போதைய சூழலில் காவல்துறையினர் சில விசயங்களில் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர் என்றே தோன்றுகிறது. காவல்துறையினரே இது போன்ற அச்சத்திற்கு ஆளானால் ,சமூகத்தில் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்க வழிவகுத்துவிடும்.

துறை சார்ந்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உயர் அதிகாரிகளுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பைத் தகுதியான ,நல்ல அதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்து ,குற்றவாளிகள் மீது சமரசமற்ற முறையில் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல் ,தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை பாய வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் குறித்து அடையாளம் காட்டுபவர்கள் மற்றும் தகவல் கொடுப்பவர்கள் மீது சமூக விரோதிகளால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. உண்மையில் ,எந்தெந்த பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் வியாபாரம் செய்யப்படுகிறது என்பது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்குத் தாராளமாகத் தெரியும். எனவே ,காவல்துறையினர் தங்களுக்கு உள்ள கள விவரங்களின் அடிப்படையில் ,போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்று இன்னும் 30 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன. இவ்வளவு குறுகிய காலத்திற்குள் முதலமைச்சரின் செயல்பாடுகளை யாராலும் குறை சொல்ல முடியாது. ஆட்சி நிர்வாகம் சீரடைய இன்னும் சில காலம் தேவைப்படும். வணிகர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ,வரும் வாரத்தில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம் என்று ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »