மேட்டுப்பாளையம் ,ஜூன் 17: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் தொழிற்சாலை கிணறு ஒன்றிலிருந்து ,கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூட்டையாகக் கட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் கோபி ராசிபுரம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் நீண்ட நாட்களாகச் செயல்படாமல் பூட்டிக்கிடக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த பழைய தொழிற்சாலை வளாகத்தை அண்மைக் காலமாகத் திருமண மண்டபமாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு தினசரி கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ,அந்தத் தொழிற்சாலை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாலடைந்த கிணறு ஒன்றிலிருந்து கடந்த சில நாட்களாகக் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்த சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ,நாளுக்கு நாள் துர்நாற்றத்தின் வீரியம் அதிகரித்ததால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ,அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுமுகை காவல் நிலையத்திற்கும் அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
also : ராஜஸ்தானில் டீக்கடை போர்வையில் உளவு வேலை… பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட இளைஞர் சிக்கினார்!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் சிறுமுகை காவல்துறையினர் ,கிணற்றின் அருகே சென்று ஆய்வு செய்தனர். கிணறு மிகவும் பாழடைந்து காணப்பட்டதால் ,தீயணைப்பு வீரர்கள் கயிறுகளின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி சோதனையிட்டனர். அப்போது கிணற்றின் உள்பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஒரு பெரிய சாக்கு மூட்டையிலிருந்துதான் அந்தத் துர்நாற்றம் வீசுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
தொடர்ந்து ,காவல்துறையினரின் முன்னிலையில் அந்தச் சாக்கு மூட்டையைத் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கட்டி ,மிகவும் சிரமப்பட்டு கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் அந்தச் சாக்கு மூட்டை பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது அதற்குள் இருந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த மூட்டைக்குள் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இருந்தது. அந்தச் சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது. மேலும் ,கொலையாளிகள் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காகவும் ,சடலம் வெளியாட்களுக்குத் தெரியாமல் கிணற்றின் அடியிலேயே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பெண்ணின் கை மற்றும் கால்களைக் கயிற்றால் இறுக்கமாகக் கட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி ,சடலம் தண்ணீருக்கு மேலே மிதந்துவிடக் கூடாது என்பதற்காக ,அந்த மூட்டையுடன் ஒரு பெரிய கல்லைச் சேர்த்துக்கட்டி கிணற்றுக்குள் வீசியிருப்பது தெரியவந்துள்ளது. சடலம் பல நாட்களாகத் தண்ணீருக்குள் இருந்ததால் முற்றிலும் சிதைந்து ,துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ,சிறுமுகை காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி ,பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார் ,அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ,எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமுகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இப்பகுதியில் மாயமான பெண்களின் விபரங்களைச் சேகரித்து வரும் காவல்துறையினர் ,இந்தத் தொழிற்சாலைப் பகுதிக்கு அண்மைக்காலமாக வந்து சென்றவர்கள் யார் யார் என்பது குறித்தும் ,கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.








