சிறப்பு தொகுப்பு , ஏப்ரல் 5 : மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எட்டாவது ஊதியக் குழு அமைப்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தங்களது மிக முக்கியமான 9 அம்சக் கோரிக்கைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஊழியர் தரப்புக்கும் அரசுக்கும் இடையிலான இந்த முதற்கட்ட நகர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Also read : எடப்பாடி பழனிசாமி ‘இரட்டை விரல்’காட்டுவதின் உண்மை என்ன? உதயநிதி ஸ்டாலின் விளக்கம் !
மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதித்துவ அமைப்பான ‘நேஷனல் கவுன்சில்’ (JCM) தற்போது மத்திய அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் நீண்ட காலமாக நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்குக் காரணியாக இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை முதலிடம் பிடித்துள்ளது. தற்போதைய புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) ஊழியர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அல்லது பழைய முறையையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் அழுத்தம் கொடுத்துள்ளன. இது தவிர ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகப் பிரச்சினைகளையும் இந்த ஊதியக் குழுவின் ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், பெண் ஊழியர்களின் பணிச் சூழல் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்தப் பட்டியலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய பொருளாதாரச் சூழல் பணவீக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் கணக்கில் கொண்டு எட்டாவது ஊதியக் குழுவின் மூலம் இந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 41,000 ரூபாய் வரை உயர்த்துவதற்குக் கணிப்புகள் நிலவுகின்றன. இந்தக் கூடுதல் உயர்வு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த ஊதியக் கட்டமைப்பு மற்றும் அலவன்ஸ்கள் உள்ளிட்ட இதர சலுகைகளும் இதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
அதே வேளையில் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் கோரியுள்ளன. கருத்துக்களைப் பதிவு செய்யும் போது விதிக்கப்பட்டுள்ள வார்த்தை வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மின்னஞ்சல் தவிர்ந்து பாரம்பரிய முறையான அஞ்சல் வழியிலும் மனுக்களை அனுப்ப அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பல்வேறு துறைகளில் உள்ள தனித்துவமான பணிப் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக அணுகாமல் துறை வாரியாகத் தனித்தனியாகப் பரிசீலித்துத் தீர்வு காண வேண்டும் என்பதும் இந்த 9 அம்சக் கோரிக்கைகளில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.
புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை 2026 ஜனவரி முதல் தேதியிட்டுப் பின்னோக்கி அமல்படுத்தப்படும் பட்சத்தில், இடைப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை ஊழியர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.








