
தமிழக அரசியல் களம்: திருச்சியில் மீண்டும் தவெக தலைவர் விஜய் பிரசாரம்?
திருச்சி , ஏப்ரல் 7: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீண்டும் திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . கட்சியின் மத்திய மண்டல பொறுப்பாளர் அளித்துள்ள முதற்கட்ட தகவல்களின்படி தவெகவின் அடுத்தகட்ட தேர்தல் உத்திகளின் முக்கிய மையப்புள்ளியாக திருச்சி மாறப்போவது உறுதியாகியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் தவெகவின் களப்பணிகளும் மக்கள் ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக மாற்று அரசியலை விரும்பும் நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு கணிசமான வரவேற்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் திருச்சியில் அவர் மீண்டும் மேற்கொள்ளவிருக்கும் பிரசாரம், மத்திய மண்டல தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .
தமிழக தேர்தலில் அதிர்ச்சி தகவல்: ரூ.1049 கோடி சொத்து அறிவித்த AIADMK வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்
இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னையின் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் இரட்டைப் போட்டியில் களம் காண்கிறார். விஜய்யின் இந்த இரட்டைப் போட்டி முடிவு அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து எழுந்துள்ள விவாதங்களுக்கு விளக்கமளித்துள்ள தவெக தலைமை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரு தொகுதிகளில் போட்டியிடுவதில் எவ்விதமான சட்ட சிக்கல்களும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக திருச்சியில் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குத் திரண்ட அலைகடலென வந்த கூட்டம், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது. அதே வேளையில், அப்போது ஏற்பட்ட வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு உண்டான அசௌகரியங்கள் குறித்தும் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. சில பகுதிகளில் பள்ளித் தேர்வுகள் எழுதுவதில் மாணவர்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இந்த முறை பிரசாரப் பயணத்தைத் திட்டமிடும் முன் மாவட்ட நிர்வாகமும் தவெக தொண்டர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக, விஜய் மீண்டும் திருச்சியில் பொதுமக்களையும் தொண்டர்களையும் சந்திக்கும் முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
“தூய்மையான அரசியல்” மற்றும் “ஊழலற்ற நிர்வாகம்” என்ற இரு முக்கியக் கொள்கைகளை தவெக இந்தத் தேர்தலில் தனது முதன்மை முழக்கமாக முன்வைத்துள்ளது.







