சென்னை , ஏப்ரல் 24 : தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவாக மாநிலம் முழுவதும் சராசரியாக 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. வழக்கமாக கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கும் என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில் இந்த முறை நகரங்களில் வாக்காளர்களின் பங்கேற்பு அசாத்தியமான முறையில் அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பாரம்பரியக் கணக்கீடுகளை தலைகீழாக மாற்றியுள்ள இந்த திடீர் எழுச்சிக்குத் தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ (SIR) நடைமுறையும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக aaவரவும் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
மாநிலத்தின் வாக்குப்பதிவுப் போக்கை உற்றுநோக்கும்போது சுமார் 35 நகரத் தொகுதிகளில் கடந்த தேர்தல்களை விட 800 முதல் 48,000 வாக்குகள் வரை கூடுதலாகப் பதிவாகியுள்ளன. தமிழகத் தேர்தல் களத்தில் எப்போதும் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கும். ஆனால் இந்த முறை நகர மக்கள் காட்டிய ஆர்வம் அந்தப் பாரம்பரிய இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளது. மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களின்படி கரூர் தொகுதி சுமார் 93.4 சதவீத வாக்குப்பதிவுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
Also : 4K அமர்க்களம்: 25 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளை அதிரவைக்கும் அஜித்-ஷாலினி காதல் காவியம்
இந்த வாக்குப்பதிவு அதிகரிப்பின் பின்னணியில் ‘டிவிகே எஃபெக்ட்’ (TVK Effect) மிக முக்கியப் பங்கு வகிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கி நேரடியாகக் களமிறங்கியது இளைஞர்கள் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மிகப்பெரிய அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது மாநாடுகள் சமூக ஊடகப் பரப்புரைகள் மற்றும் ‘மாற்று அரசியல்’ என்ற முழக்கம் ஆகியவை வழக்கமாகத் தேர்தல் நாளன்று வீட்டை விட்டு வெளியே வராத நகர்ப்புற வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு நோக்கி வரவழைத்துள்ளது கள நிலவரங்கள் மூலம் தெளிவாகிறது.
அதே நேரத்தில் இந்த சதவீத உயர்வுக்குப் பின்னால் தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான நிர்வாகச் செயல்பாடும் ஒளிந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிரப் பட்டியல் திருத்தம்’ (Special Intensive Revision – SIR) என்ற சுத்திகரிப்பு நடவடிக்கை இதற்கு முதன்மை அடிப்படையாகும். இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்த போலி வாக்காளர்கள் ஒரே நபர் இரு இடங்களில் இருக்கும் இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் மாறியவர்களின் பெயர்கள் ஆகியவை முறையாக நீக்கப்பட்டன. இந்தத் தூய்மைப்படுத்தல் நடவடிக்கையால் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்த தேக்க நிலை குறைந்து உண்மையான வாக்காளர்களின் எண்ணிக்கை துல்லியமாக மாறியது. இதுவும் வாக்குப்பதிவு சதவீதம் இந்த அளவிற்கு எகிறியதற்கு மிக முக்கியக் காரணமாகும்.
கிராமப்புறங்களில் எப்போதும் போல தங்களின் வழக்கமான அதிகப்படியான வாக்குப்பதிவுப் பதிவு நீடிக்கும் வேளையில் அதற்கு இணையாக நகரங்களும் தங்களின் பங்களிப்பை உயர்த்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய போக்கைக் காட்டுகிறது. நகர்ப்புற-கிராமப்புற வாக்குப்பதிவு இடைவெளி குறைந்திருப்பது தங்களின் வாக்கு வங்கியை மட்டுமே நம்பியிருந்த பல முக்கியக் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பாராத இந்த அலை அலையான வாக்குப்பதிவு காரணமாக வழக்கமான வாக்குக் கணிப்புகளும் தேர்தலுக்குப் பிந்தைய எக்சிட் போல் (Exit Poll) முடிவுகளும் முற்றிலும் திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. களத்தில் நிலவும் இந்த மௌனப் புரட்சியும் கணிக்க முடியாத வாக்குப்பதிவு உயர்வும் யாருடைய வெற்றியைப் பாதிக்கும் அல்லது யாருக்குப் புதிய வாய்ப்பை வழங்கும் என்பதை அரசியல் கட்சிகளால் தற்போதைக்குக் கணிக்க முடியவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தாக்கமும் தேர்தல் ஆணையத்தின் நிர்வாகச் சுத்திகரிப்பும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த 85 சதவீதப் பெருவாரியான வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக முடியும் என்பது வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதே அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.







