சண்டிகர் , ஏப்ரல் 26: பஞ்சாப் மாநில அரசியலில் நிலவி வந்த அமைதியை ஒட்டுமொத்தமாகக் குலைக்கும் வகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ளது. அக்கட்சியின் மிக முக்கிய இளம் முகமாகவும் தேசிய அளவிலான அடையாளமாகவும் பார்க்கப்பட்ட ராகவ் சத்தா திடீரென ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இந்த அதிரடி திருப்பத்தைத் தொடர்ந்து அவருடன் ஏழு ராஜ்யசபா எம்பிக்களும் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நகர்வுகளால் பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ராகவ் சத்தா ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்தே அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் பகிரங்கமாக வெளிவரத் தொடங்கின. உட்கட்சி மோதல்களின் உச்சகட்டமாக தற்போது அவர் பாஜாகவில் இணைந்துள்ள நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையின் ஆளும் கட்சி எம்எல்ஏக்களில் 60க்கும் மேற்பட்டோர் அவருடன் தொடர் தொடர்பில் இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் அம்மாநில ஆளும் தரப்பை நிலைகுலையச் செய்துள்ளன.
மொத்தம் 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி 90க்கும் அதிகமான எம்எல்ஏக்களின் பலத்துடன் அசைக்க முடியாத பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தி வருகிறது. ஆட்சி அமைக்க அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க 59 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே போதுமானது என்ற சூழலில் தற்போதைய தகவல்களின்படி சுமார் 48 எம்எல்ஏக்கள் ராகவ் சத்தாவுக்குத் தங்களின் உறுதியான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மேலும் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் தற்போதைய சூழலைக் கவனித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம் என்ற தயக்க நிலையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப் பேரவையில் ஆளும் கட்சியின் பலம் அதிகமாக இருந்தாலும் இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பிரிந்து சென்றால் பகவந்த் மான் அரசு கடுமையான சட்டச் சிக்கலையும் அரசியல் நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி ஆளும் கட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அந்த சட்ட விதிகளின்படி பார்த்தால் இந்த எம்எல்ஏக்கள் குழுவின் நகர்வு பெரிய அளவில் இருந்தால் மட்டுமே பஞ்சாபில் உடனடி ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த அரசியல் நிலநடுக்கம் குறித்துப் பேசியுள்ள முதலமைச்சர் பகவந்த் மான் இது பஞ்சாப் மக்களுக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அரசியல் துரோகம் என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்பை விலைபேசி மாற்றுவதற்கும் ஆம் ஆத்மி ஆட்சியை உடைப்பதற்கும் பாரதிய ஜனதா கட்சி திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜகவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயக அமைப்பையே சீர்குலைப்பதாகச் சாடியுள்ளார்.
மாநில அரசியலைத் தாண்டி இந்த விவகாரம் டெல்லி நாடாளுமன்ற வட்டாரங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ராஜ்யசபாவில் ஆம் ஆத்மியின் பலம் கணிசமாகக் குறைந்துள்ள அதே வேளையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. இது நாடாளுமன்ற மேலவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவையும் ஆளுங்கட்சிக்குச் சாதகமான சூழலையும் உருவாக்கும் என மதிப்பிடப்படுகிறது.







