
திருப்பூர் , ஏப்ரல் 5: தமிழ்நாட்டின் முன்னணி தொழில் நகரமான திருப்பூரில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் குப்பை மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான பிரச்சினை தற்போது புதிய அரசியல் வடிவத்தை எடுத்துள்ளது. கழிவுகள் முறையாகக் கையாளப்படாததால் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி உள்ளூர் விவசாயிகளும் பொதுமக்களும் வரும் தேர்தலில் ஒரு புதிய தேர்தல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி அரசுக்கு அழுத்தத்தைத் தரும் நோக்கில் திருப்பூர் தெற்கு தொகுதியில் சுமார் 400 பேரை சுயேச்சை வேட்பாளர்களாகக் களம் இறக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ALso Read : 8th Pay Commison: பழைய ஓய்வூதிய திட்டம் முதல் பெண்கள் நலன் வரை கோரிக்கைகள் பட்டியல் வெளியீடு
மாநிலத்தின் முக்கியப் பொருளாதார மையமாக விளங்கும் திருப்பூரின் முதலிப்பாளையம் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட பழைய கல் குவாரிகளில் பல ஆண்டுகளாக நகராட்சிக் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளிலிருந்து வெளியேறிய நச்சுக் கழிவுகள் நிலத்தில் கசிந்து அப்பகுதியின் நிலத்தடி நீரை முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றிவிட்டதாகப் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இதனால் விவசாய நிலங்களின் தரம் குறைந்து பயிர் உற்பத்தியும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட சில பகுதிகளில் குப்பை கொட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்த சட்டப் போராட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே பல ஆண்டுகளாகக் கொட்டப்பட்ட குப்பைகளால் நிலத்தடி நீருக்கும் மண்ணுக்கும் ஏற்பட்ட சேதம் சரிசெய்ய முடியாத அளவுக்கு மிக மோசமாகிவிட்டது என்பதே அவர்களின் தற்போதைய கவலையாக உள்ளது. இதற்கு முன்பும் நொய்யல் நதிக்கரையோரங்களில் குப்பைகளைக் கொட்டுவதும் அவற்றை அங்கேயே எரிப்பதும் தொடர்கதையாக இருந்த நிலையில் அதுவும் நீர் மாசுபாட்டையும் விவசாயப் பாதிப்பையும் தீவிரமாக்கியதாகப் பலமுறை புகார்கள் எழுந்தன.
தற்போது இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வழக்கமான சாலை மறியல் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை விட தேர்தல் களத்தையே தங்களின் போராட்டக் களமாக மாற்ற மக்கள் முடிவு செய்துள்ளனர். ஒரே தொகுதியில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தேர்தல் நிர்வாகத்திற்கும் மற்றும் அரசுக்கும் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை உணர்த்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்ட இந்த கிராமப்புறப் பகுதிகளை அரசு உடனடியாக “மாசுபட்ட பகுதிகள்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு அறிவித்தால் மட்டுமே அங்கு முறையான நச்சு நீக்க மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பங்களுக்குத் தகுந்த இழப்பீடும் அரசு உதவிகளும் கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.







