
Tokyo , May 14 : நமது சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய விண்பொருள், உலக வானியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் ஈர்த்துள்ளது. ‘2002 XV93’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரான்ஸ் நெப்டியூனியன் (Trans-Neptunian Object – TNO) விண்பொருளைச் சுற்றி மெல்லிய வளிமண்டலம் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. வளிமண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்குப் போதிய ஈர்ப்பு விசை இருக்காது எனக் கருதப்பட்ட மிகச் சிறிய விண்பொருளில் இத்தகைய சூழல் தென்பட்டிருப்பது விஞ்ஞானிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த கோளாகத் திகழ்வதற்கு அதன் வளிமண்டலமே முதன்மைக் காரணமாகும். நம்மைச் சூடாக வைத்திருப்பது முதல், நாம் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை வழங்குவது வரை வளிமண்டலம் பல அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்கிறது. வானிலை மாற்றங்கள் அனைத்தும் இந்த வளிமண்டலப் பரப்பிலேயே நிகழ்கின்றன. இதன் காரணமாகவே, பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற பிற கோள்களைத் தேடும் ஆய்வுகளில் வளிமண்டலக் கண்டுபிடிப்பு மிக முக்கியப் மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
also read : பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. “சென்னையின் எப்ஸ்டீன்” என பகீர் கிளப்பிய பாடகி ஸ்வாகதா
நமது சூரிய குடும்பத்தில் நெப்டியூன் கோளின் சுற்றுப்பாதைக்கு அப்பால் பரந்து விரிந்து கிடக்கும் எல்லையே ‘குயீப்பர் பெல்ட்’என அழைக்கப்படுகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவான காலகட்டத்தின் எச்சங்களாக, கோடிக்கணக்கான உறைந்த பாறைகளும் பனிப்பொருட்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இவை ‘ட்ரான்ஸ் நெப்டியூனியன் ஆப்ஜெக்ட்ஸ்’ என்று வானியலில் குறிப்பிடப்படுகின்றன.
இந்த TNO பிரிவில் மிக முக்கியமானதும், மிகப்பெரியதுமான விண்பொருள் புளூட்டோ ஆகும். புளூட்டோவிற்கு மிக மெல்லிய வளிமண்டலம் இருப்பது ஏற்கனவே அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், புளூட்டோவை விட மிகச் சிறிய விண்பொருட்களுக்குப் போதிய ஈர்ப்பு விசை (Gravity) இருக்காது என்பதால், அவற்றால் வளிமண்டலத்தைத் தக்க வைக்க இயலாது என்றே வானியலாளர்கள் நீண்டகாலமாக நம்பி வந்தனர். இதன் காரணமாகவே ஏரிஸ், ஹோமியா, மக்மக் மற்றும் குவோர் போன்ற குள்ளக் கோள்களுக்குக் கூட வளிமண்டலம் இல்லை என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள 2002 XV93 விண்பொருள் இந்த ஒட்டுமொத்த அறிவியல் கோட்பாட்டையே சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
வெறும் 500 கிலோமீட்டர் விட்டம்: மெல்லிய வளிமண்டலத்தைக் கொண்டுள்ள புளூட்டோவின் விட்டம் சுமார் 2,377 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், தற்போதைய ஆய்வுக்குரிய 2002 XV93 விண்பொருளின் குறுக்களவு வெறும் 500 கிலோமீட்டர்கள் மட்டுமே. ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகச் சிறிய பரப்பளவைக் கொண்டிருந்த போதிலும், இது வளிமண்டலத்தைத் தக்க வைத்திருப்பதுதான் வியப்பின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் தேசிய வானியல் ஆய்வகத்தின் (National Astronomical Observatory of Japan) இணை பேராசிரியரும் மூத்த விரிவுரையாளருமான டாக்டர் கோ அரிமாட்சு தலைமையிலான குழுவினர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இவர்களது ஆய்வுக் கட்டுரை புகழ்பெற்ற ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ (Nature Astronomy) சர்வதேச அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
விண்மீன் மறைப்பு மூலம் வெளிவந்த உண்மை: கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், விண்வெளியில் மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்றை இந்த 2002 XV93 விண்பொருள் கடந்து சென்றபோது இந்த ஆய்வு சாத்தியமானது. தொலைதூரத்தில் உள்ள ஒரு விண்பொருள், தனக்குப் பின்னணியில் இருக்கும் ஒரு விண்மீனை தற்காலிகமாக மறைக்கும் நிகழ்வு வானியலில் ‘விண்மீன் மறைப்பு-Stellar Occultation என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அரிய நிகழ்வுகள், சம்பந்தப்பட்ட விண்பொருளின் வடிவம், அளவு மற்றும் அதன் வளிமண்டல அமைப்பைத் துல்லியமாக ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு நல்வாய்ப்பை வழங்குகின்றன.
ஜப்பானில் உள்ள கியோட்டோ மற்றும் நகோனா மாகாண விண்வெளி ஆய்வு மையங்கள் மற்றும் புகுசிமாவில் உள்ள அதிநவீன தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்த நோக்காய்வைச் சான்றுகளுடன் பதிவு செய்தனர்.
பொதுவாக, ஒரு விண்பொருளுக்கு வளிமண்டலம் இல்லை எனில், அதன் பின்னணியில் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளி சட்டென்று மறைந்து, மீண்டும் சட்டென்று தோன்றும். ஆனால், அந்தப் பொருளைச் சுற்றி வளிமண்டலம் இருக்கும் பட்சத்தில், நட்சத்திரத்தின் ஒளி உடனடியாக மறையாமல் மெல்ல மங்கி, பின்னர் தோன்றும். 2002 XV93 விண்பொருள் நகர்ந்தபோது, அதன் பின்னணியில் இருந்த நட்சத்திரத்தின் ஒளி படிப்படியாக மங்கியதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். இதன் மூலமே அங்கு மெல்லிய வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பூமியை விட பல மில்லியன் மடங்கு மெல்லியது: ஆராய்ச்சியாளர்களின் ஆரம்பகட்ட கணக்கீடுகளின்படி, 2002 XV93 விண்பொருளைச் சுற்றியுள்ள வளிமண்டலமானது, பூமியின் வளிமண்டல அடர்த்தியோடு ஒப்பிடும்போது சுமார் 5 மில்லியன் முதல் 10 மில்லியன் மடங்கு வரை மெல்லியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








