
சிறப்பு கட்டுரை : இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணமோ அல்லது பகட்டான ஆடம்பரப் பொருளோ மட்டுமல்ல. அது குடும்பங்களின் அவசரகாலச் சேமிப்பு, சமூக அங்கீகாரம், தலைமுறை தாண்டிய பாரம்பரியம் மற்றும் பெண்களின் அசைக்க முடியாத நிதிப் பாதுகாப்பு அரண். ஆனால், தற்போதைய உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியர்களின் இந்தத் தீராத ‘தங்கக் காதல்’ நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது ஊடகவியலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் (Austerity measures) அவசியம் என்பதை வலியுறுத்தினார். எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, அவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றுடன், தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோள், தற்போது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
வரலாற்று உச்சத்தில் தங்கம் இறக்குமதி செலவு (Gold Import Bill)
பிரதமரின் இந்தத் திடீர் வேண்டுகோளுக்குப் பின்னால் இருக்கும் முதன்மைக் காரணி, இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) தங்க இறக்குமதிச் செலவு ஆகும். இக்காலகட்டத்தில், இந்தியா சுமார் 72 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது இந்தியப் பொருளாதார வரலாற்றிலேயே பதிவான மிக அதிகபட்ச தொகையாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த இறக்குமதிச் செலவினம் 24 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இந்தத் தரவுகளின் பின்னணியில் ஒரு சுவாரசியமான உண்மை ஒளிந்துள்ளது. இந்தியா இந்த ஆண்டு அதிக அளவிலான தங்கத்தை வாங்கவில்லை; மாறாக, அளவின் அடிப்படையில் (Volume) பார்த்தால், தங்கம் இறக்குமதி 757 டன்னிலிருந்து 721 டன்னாகச் சற்றே குறைந்துள்ளது. அப்படியிருந்தும் இறக்குமதிக்கான செலவு இந்த அளவுக்குக் கட்டுக்கடங்காமல் உயர்ந்ததற்குக் காரணம், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிகக் குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்ததே ஆகும்.
சர்வதேசப் பதற்றமும் ‘பாதுகாப்பான முதலீடும்’
உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical tensions), குறிப்பாக மேற்கு ஆசிய (West Asia) பிராந்தியத்தில் நீடிக்கும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் ஆகியவை சர்வதேச முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடங்களை (Safe haven assets) நோக்கித் திருப்பியுள்ளன. இந்த வரிசையில் எப்போதுமே முதலிடம் வகிக்கும் தங்கத்தின் மீது உலகளாவிய முதலீடுகள் குவிந்ததால், அதன் சர்வதேச விலை வரலாறு காணாத உயரத்தைத் தொட்டது.
இதன் நேரடித் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த ஆண்டுதான் உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கம் முதன்முறையாக ரூ.1 லட்சத்தைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியது. ஆனால், சர்வதேசச் சூழல்களால் அடுத்த சில மாதங்களிலேயே இதன் விலை மேலும் வேகமெடுத்து, தற்போது 10 கிராம் தங்கம் ரூ.1.5 லட்சம் என்ற பிரம்மாண்ட எல்லையை நெருங்கியுள்ளது. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வங்கிகளின் வட்டி விகிதக் குறைவு போன்ற சூழல்களால், இந்தியப் நுகர்வோரும் தங்கத்தையே முதன்மை முதலீடாகத் தேர்ந்தெடுப்பது, உள்நாட்டுத் தேவையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வர்த்தகப் பற்றாக்குறை
இந்தியா தனக்குத் தேவையான தங்கத்தின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. இதற்கான கட்டணத்தை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டியுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு பெருமளவில் சுருங்குகிறது. இது நேரடியாக நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை (Trade Deficit) அதிகரிக்கிறது.
சென்ற நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 333 பில்லியன் டாலரைக் கடந்து அதிர்ச்சியளித்துள்ளது. இதில் தங்க இறக்குமதியின் பங்கு மட்டுமே மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மொத்த இறக்குமதிப் பொருட்களின் மதிப்பில் 9 சதவீதத்திற்கும் மேல் தங்கம் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. இது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit – CAD) மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்குகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும் போது, சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதோடு, உள்நாட்டில் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம்: இரட்டைப் பாதிப்பு
மேற்கு ஆசியப் பதற்றம் கச்சா எண்ணெய் (Crude Oil) விநியோகத்தையும், அதன் விலையையும் பாதிக்கும் என்ற அச்சம் நீடிக்கிறது. ஏற்கனவே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகப் பெருந்தொகையைச் செலவிடும் இந்தியாவுக்கு, ஒரே நேரத்தில் எண்ணெய் விலையும், தங்க இறக்குமதிச் செலவும் உயர்வது ‘இரட்டை அழுத்தத்தை’ (Double whammy) ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான், அரசுத் தரப்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் விழிப்புணர்வு உத்தி கையாளப்படுகிறது.
இறக்குமதி நாடுகளும் ஐக்கிய அரபு அமீரக (UAE) ஒப்பந்தமும்
இந்தியாவிற்கு அதிகளவில் தங்கம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் (CEPA) தற்போது வர்த்தகப் பகுப்பாய்வாளர்களின் உன்னிப்பான கவனிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிச் சலுகைகள் (Lower tariffs) வழங்கப்படுவதால், அங்கிருந்து வரும் தங்கத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பிற நாடுகளில் இருந்து வரும் தங்கமும் இந்த வரிச் சலுகையைப் பெறுவதற்காக துபாய் வழியாக மாற்றி (Re-routing) அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் சில வர்த்தக வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.
அரசின் கொள்கை மாற்றங்கள்
தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த கடந்த 2022 இல் ஒன்றிய அரசு அதன் இறக்குமதி வரியை (Import Duty) 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. ஆனால், இது உள்நாட்டில் தங்கக் கடத்தலை (Smuggling) அதிகரித்ததாகவும், ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் தொழில்துறையை (Gems and Jewellery industry) பாதித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக, 2024 வரவுசெலவுத் திட்டத்தில் (Budget) இறக்குமதி வரி மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
வரிக்குறைப்பு உள்ளூர் சந்தையைச் சீரமைத்தாலும், தற்போதைய சர்வதேச நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு, இறக்குமதிச் செலவை மீண்டும் கட்டுப்படுத்த முடியாத உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாகவே, சட்ட ரீதியான கட்டுப்பாடுகளைத் தாண்டி, நுகர்வோர் மத்தியில் ‘விவேகமான நுகர்வு’ (Cautious spending) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பிரதமர் மோடி நேரடியாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.















