
Chennai secretariat, May 13 : முதல்வர் விஜய் அரசின் நம்பிக்கை தீர்மான விவாதத்தில் பேசிய சௌமியா, பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் மூடல், போதை ஒழிப்பு குறித்து வலுவான கருத்துகளை முன்வைத்தார்.
சட்டப்பேரவையில் பேச தொடங்கிய சௌமியா, சமூகநீதி, ஜனநாயகம் மற்றும் சமத்துவம் என்பவையே பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை கொள்கைகள் என்று விளக்கினார். போதை இல்லாத தமிழ்நாடு, சமூகநீதி மற்றும் வளர்ச்சியில் முன்னேறும் புதிய தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என அவர் கூறினார்.
69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பு எனப்படும் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் சௌமியா வலியுறுத்தினார். பெண்களின் பாதுகாப்பு, இலவச தரமான கல்வி, இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மணல் மற்றும் கனிம வள கொள்ளையை தடுக்குதல் போன்ற பல முக்கிய அம்சங்களையும் அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
அதேபோல், தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். மருத்துவ சேவைகள் இலவசமாகவும் தரமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் பதிவு செய்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சி தேர்தலுக்கு முன் வெளியிட்ட வாக்குறுதிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சௌமியா குறிப்பிட்டார். குறிப்பாக சாதிவாரி சர்வே, பெண்கள் பாதுகாப்பு, மதுவணிக கட்டுப்பாடு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை, நதிகள் இணைப்பு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், பள்ளிகள், வழிபாட்டு தளங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது என்றும் பாராட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒரு கடை மூடினால் நான்கு சந்து கடைகள் திறக்கப்படுகின்றன”
மது ஒழிப்பிற்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக போராடி வருவதாக சௌமியா தெரிவித்தார். உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், ஒரு டாஸ்மாக் கடையை மூடினால் அதற்குப் பதிலாக அருகிலேயே சட்டவிரோத சந்து கடைகள் திறக்கப்படுகின்றன என்ற முக்கிய குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த நிலைமை அதிகமாக இருப்பதாக கூறிய அவர், “ஒரு கடையை மூடினால் நான்கு சந்து கடைகள் திறக்கப்படுகின்றன. இதை கண்காணிக்கவில்லை என்றால் மதுவிலக்கு என்ற நோக்கம் முழுமையாக பலிக்காது” என்று எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் அதிக கவனம் பெற்ற பகுதி பெண்கள் பாதுகாப்பு குறித்த அவரது உரைதான். “ஒரு டாஸ்மாக் கடையை தாண்டி செல்லும்போது பெண்கள் தலைநிமிர்ந்து செல்ல முடியாத நிலை இருக்கிறது” என்று அவர் கூறிய தருணம் அவையில் அமைதியை ஏற்படுத்தியது.
ஒரு பெண் வெளியே சென்று படிப்பதற்கும், வேலைக்கு செல்வதற்கும், இரவில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கும் கூட குடும்பங்கள் அச்சப்படுகின்றன என்று அவர் கூறினார். மதுப்பழக்கம் மற்றும் போதை கலாச்சாரம் பெண்களின் பாதுகாப்பை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஒரு பெண் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக வீட்டை அடைவார்களா என்ற பயம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் இருக்கிறது” என்ற அவரது வரிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
“சிங்கப்பெண்” பிரிவுக்கு வரவேற்பு
பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண்” பிரிவை சௌமியா வரவேற்றார். அதேசமயம், அந்த பிரிவை மேலும் வலுப்படுத்த தனியாக ஒரு டிஜிபி தலைமையில் பெரிய அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். அது பெண்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, பெண்கள் அதிகாரமடைவதற்கும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாமக எடுத்த முடிவு
தமிழக மக்களின் நலனுக்காக அரசு நல்ல நடவடிக்கைகள் எடுத்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும் என்றும், சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் எதிர்க்கும் என்றும் சௌமியா தெளிவுபடுத்தினார்.
இதன் அடிப்படையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் பாட்டாளி மக்கள் கட்சி வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகி இருப்பதாக அவர் அறிவித்தார்.













