சென்னை , ஜூன் 8:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்திற்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி உட்பட மொத்தம் 7 பேர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம், அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்ததை அடுத்து இந்த இடத்திற்கான காலிப் பணியிடம் உருவானது.
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு சட்டமன்ற எண்களின் அடிப்படையில் இந்த இடத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்குக் (டிவிகே) கிடைத்தது. எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான சமூக நீதி முற்போக்குக் கூட்டணியில் உள்ள முக்கிய அங்கத்துவக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய டிவிகே தலைமை முடிவெடுத்தது. காங்கிரஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த இடத்தை அக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
Also : தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தமா? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை தனது அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் (AIPC) பிரிவின் தலைவரான பிரவீண் சக்கரவர்த்தியைத் தமிழகத்திற்கான ராஜ்யசபா வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் பிரவீண் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறைப்படி தாக்கல் செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான இன்று வரை பிரவீண் சக்கரவர்த்தி தவிர மேலும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் ஏழு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளையும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். போட்டி இருக்கும் பட்சத்தில், திட்டமிட்டபடி வரும் ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழக அரசியல் சூழலில் புதிய கூட்டணியின் முதல் நாடாளுமன்றப் பிரதிநிதியாகப் பிரவீண் சக்கரவர்த்தி களம் இறங்குவதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.








