சென்னை , ஜூன் 30: தமிழகத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து சம்பந்தப்பட்ட மூன்று கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க அரசு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையைத் தாண்டி கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) வழிகாட்டுதலின்படி பல் மருத்துவப் படிப்பிற்கான (BDS) கட்டணத்தை நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சில முன்னணி தனியார் கல்லூரிகள் விதிகளுக்குப் புறம்பாக ஐந்து ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கான முழு கட்டணத்தையும் மாணவர்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த புகார்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Also : தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி ! சவரனுக்கு ₹2,160 சரிந்தது தங்கம்!
இந்தக் கூடுதல் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக புகாருக்கு உள்ளான குறிப்பிட்ட மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கெனத் தனியாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் கட்டண விவரங்கள் மற்றும் கணக்குகளை நேரடியாக ஆய்வு செய்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் அரசிடம் தங்களது விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த மருத்துவக் கல்விக்கான கட்டண அமைப்பை மீறி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வமாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.





