சென்னை , ஏப்ரல் 24 : தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத திருப்பமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு, ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது. இந்த இமாலய வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு சாதகமா அல்லது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா என்ற விவாதங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் நிஜ நிலவரங்களை தரவுகளுடன் உடைத்துள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி.
பொதுவாக வாக்குப்பதிவு சதவீதம் எகிறும்போது அது ஆட்சிக்கு எதிரான அலை என்று அரசியல் வட்டாரங்களில் எளிதாக ஒரு கணக்கு போடப்படும். ஆனால் இந்த 85 சதவீத உயர்வு என்பது வெறும் வாக்காளர்களின் எழுச்சி மட்டுமல்ல, அதற்கு பின்னால் தேர்தல் ஆணையம் அமைதியாக செய்த ஒரு பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மாற்றமும் ஒளிந்திருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கில் பாஜ ஆட்சி அமைப்பது உறுதி: அமித் ஷா அதிரடி முழக்கம்
இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்ததற்கு முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்களின் வரவு மிக முக்கியமான காரணியாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் இருந்த அசாத்திய ஆர்வம் வாக்குச்சாவடிகளில் எதிரொலித்ததை மறுக்க முடியாது. ஆனால், சதவீத கணக்கு இந்த அளவுக்கு எகிறியதற்கு உண்மையான காரணம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுத்திகரிப்பு நடவடிக்கைதான்.
தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இம்முறை இறந்தவர்கள், போலிப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 70 முதல் 75 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இந்த தூய்மைப்படுத்தல் நடவடிக்கை ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், வகுக்கும் எண் (Denominator) குறைந்ததால், தானாகவே வாக்குப்பதிவின் சதவீத அளவு எகிறிப் பெரியதாகக் காட்சியளிக்கிறது.
இதனைப் புரிந்துகொள்ள தலைநகர் சென்னையை ஒரு நேரடி உதாரணமாக கோபாலசுவாமி விளக்கியுள்ளார். முந்தைய தேர்தல்களில் சென்னையில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சமாக இருந்தது. ஆனால் இப்போதைய தூய்மையான பட்டியலில் அது 28 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், கடந்த தேர்தலிலும் சரி, இந்தத் தேர்தலிலும் சரி, உண்மையில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 24 லட்சம்தான். முந்தைய கணக்கின்படி பார்த்தால் இது 60 சதவீத வாக்குப்பதிவு, ஆனால் தற்போதைய புதிய பட்டியலின்படி கணக்கிட்டால் இது 85 சதவீத வாக்குப்பதிவாக மாறிவிடுகிறது.
ஆகவே, முன்னெப்போதையும் விட மக்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து வாக்களித்துவிட்டார்கள் என்ற ஒற்றை வாதம் மட்டுமே இங்கு முழு உண்மையல்ல. கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட இந்த அடிப்படை மாற்றமே 85 சதவீத வரலாற்றுப் பதிவாகத் திரையில் தெரிகிறது. கடந்த 2021 தேர்தலிலும் இதே போன்ற கடுமையான சுத்திகரிப்பு முறையை கையாண்டிருந்தால், அப்போதே வாக்குப்பதிவு சதவீதம் இப்போதைய அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம்.
அதேசமயம், இந்த அதீத வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு எதிரான ‘அலை’ என்று பரப்பப்படும் வழக்கமான அரசியல் கோட்பாடுகளையும் அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். அதிக வாக்குப்பதிவு என்பது ஆளுங்கட்சிக்கு எதிரான கோபமாகவும் இருக்கலாம், மாற்று வேட்பாளருக்கான ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது தற்போதைய அரசின் திட்டங்களுக்குக் கிடைத்த பாராட்டை வெளிப்படுத்தும் அங்கீகாரமாகவும் இருக்கலாம். இதனைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக எந்தவொரு அறிவியல் கணிப்புகளின் மூலமும் இப்போதே துல்லியமாகத் தீர்மானித்துவிட முடியாது.
இளைஞர்களின் தீவிர பங்கேற்பு, கடுமையான வாக்காளர் பட்டியல் திருத்தம், நகர மற்றும் கிராமப்புற வாக்குப்பதிவு மாற்றங்கள் எனப் பல்வேறு வியூகக் காரணிகளால் இந்த 2026 தேர்தல் தனித்துவமான ஒன்றாக மாறியுள்ளது. இதன் நிஜமான அரசியல் தாக்கம் என்ன, மக்களின் உண்மையான தீர்ப்பு யாருக்கு சாதகம் என்பது வரும் மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, வாக்குப்பெட்டிகள் உண்மை நிலவரத்தைக் கக்கும்போது மட்டுமே அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.







