
போபால் , ஏப்ரல் 24: வறுமையின் பிடியும் சமூகத்தின் ஏளனப் பார்வைகளும் ஒருபோதும் திறமையின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி நவ்ஷீன் நாஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். அடிப்படை வசதிகளற்ற சூழலிலிருந்து புறப்பட்டுத் தனது அசாத்திய உழைப்பால் இன்று இந்திய ஹாக்கி அணியின் கதவுகளை அவர் தட்டியிருப்பது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சியோனி (Seoni) பகுதியைச் சேர்ந்த நவ்ஷீன் நாஸின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது. தினக்கூலி தொழிலாளியான இவரது தந்தை அக்பாஸ் கானுக்கு ஒரு நாளைக்குக் கிடைக்கும் வருமானம் வெறும் 250 ரூபாய் மட்டுமே. ஏழு உடன்பிறந்தவர்களுடன் வசிக்கும் இக்குடும்பத்தில் மூன்று வேளை சத்தான உணவு என்பதே மிகப்பெரிய ஆடம்பரமாக இருந்து வந்துள்ளது. இத்தகையதொரு இக்கட்டான வாழ்வாதாரச் சூழலில் செலவுமிக்க ஹாக்கி விளையாட்டை நவ்ஷீன் தேர்வு செய்தபோது சுற்றியிருந்தவர்கள் பலரும் அதனை ஒரு பகற்கனவாகவே பார்த்தனர்.
விளையாட்டுக்கான முறையான உபகரணங்களை வாங்கக்கூட அவரிடம் வசதி இருக்கவில்லை. பிற வீரர்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்த உடைந்த ஹாக்கி மட்டைகளே இவருடைய ஆரம்பகால ஆயுதங்களாக மாறின. அந்த உடைந்த மட்டைகளைத் துணியால் இறுக்கக் கட்டி மீண்டும் மீண்டும் சரிசெய்து கொண்டு மைதானத்திற்குப் புறப்பட்டார் நவ்ஷீன். உறவினர்களின் எதிர்ப்புகளும் சமூகத்தின் கடுமையான விமர்சனங்களும் ஒருபுறம் அலைக்கழித்தபோதும் எதற்கும் மனம் தளராமல் தினசரிப் பயிற்சியைத் தொடர்ந்தார்.
நவ்ஷீனின் இந்த அசராத தேடலும் திறமையும் கடந்த 2023 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமியின் (Madhya Pradesh Hockey Academy) கவனத்திற்குச் சென்றது. அதுவே அவரது விளையாட்டு வாழ்க்கையின் திருப்புமுனையாகவும் அமைந்தது. அங்கு இணைந்த பிறகே அவருக்கு முறையான உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, சத்தான உணவு மற்றும் தரமான ஹாக்கி உபகரணங்கள் ஆகியவை தடையின்றிக் கிடைத்தன.
Also : திருச்சி கிழக்கு தொகுதியில் நள்ளிரவில் கள்ள ஓட்டு முயற்சி: வாக்குச்சாவடி முற்றுகையால் பரபரப்பு
வசதிகள் கைகூடியதும் தனது அசாத்திய ஆட்டத் திறனை தேசிய அளவில் வெளிப்படுத்தத் தொடங்கினார் நவ்ஷீன். கடந்த ஆண்டு ராஜ்கிர் பகுதியில் நடைபெற்ற இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் களமிறங்கிய அவர் எதிரணிகளின் தடுப்பாட்டங்களைத் தவிடுபொடியாக்கி மொத்தம் 9 கோல்களை அடித்துத் துவம்சம் செய்தார். அந்தத் தொடரின் அதிக கோல்களை அடித்த வீராங்கனை என்ற தனித்துவமான பெருமையையும் தன்வசப்படுத்தினார். ஒரு காலத்தில் அவருடைய எளிய ஆடைகளைக் கண்டு கேலி செய்தவர்கள் அனைவரும் இன்று அவரது ஆட்டத்தைக் கண்டு எழுந்து நின்று கைதட்டும் நிலை உருவானது.
தேசிய அளவில் சிறந்த வீராங்கனையாக நவ்ஷீன் தேர்வு செய்யப்பட்ட அந்தத் தருணத்தில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அவரது தந்தை அக்பாஸ் கான் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். வறுமையின் காரணமாகத் தங்களை மதிக்காதவர்கள் இன்று தன் மகளுடன் புகைப்படம் எடுக்க வரிசையில் நிற்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தற்போது போபால் நகரில் நடைபெற்று வரும் இந்திய அணியின் தீவிர தேசிய பயிற்சி முகாமில் நவ்ஷீன் நாஸ் பங்கேற்று வருகிறார். இதன் தொடர்ச்சியாக வரும் மே 29 ஆம் தேதி முதல் ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ள 18 வயதுக்குட்பட்டோருக்கான (Under-18) ஆசிய ஹாக்கி கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.தேசியக் கொடியைத் தாங்கி நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே தனது ஒரே இலக்கு என நவ்ஷீன் நாஸ் உறுதியுடன் தெரிவிக்கிறார்.







