
சென்னை , ஏப்ரல் 24 : சென்னை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) காஞ்சிபுரத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு ஏற்றிச் சென்ற லாரியை அதிமுகவினர் அதிரடியாக வழிமறித்து சிறைபிடித்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் வெளிப்புறத்தில் முறையான சீல் வைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கின.
Also : சேலம் மாத்தூர் தொகுதியில் ‘இரட்டை ஓட்டு’ முயற்சி: 20 வயது பெண் மீது வழக்கு பதிவு !!
அதன்படி ஆலந்தூர் தொகுதியின் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டது. இந்த வாகனம் பூந்தமல்லி அடுத்த குமணஞ்சாவடி பகுதியைச் கடந்தபோது அங்கு திரண்ட அதிமுகவினர் திடீரென லாரியை முற்றுகையிட்டு வழிமறித்தனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவானது.
லாரியை மறித்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளுடனும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் லாரியின் வெளிப்புறத்தில் எந்தவொரு பாதுகாப்பு சீலும் வைக்கப்படவில்லை என்றும் இது ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த லாரியைத் தொடர்ந்து திமுகவினரின் வாகனம் ஒன்று பின்தொடர்ந்து வந்ததாகவும் இது தங்களுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அதிமுக தரப்பில் பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விளக்கமளித்த அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாரியின் உள்ளே விதிமுறைகளின்படி முறையாக சீல் வைக்கப்பட்டுப் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்றும் வாகனத்தின் வெளிப்புறத்தில் சீல் வைக்க வேண்டிய அவசியம் தேர்தல் விதிகளில் இல்லை என்றும் தெளிவுபடுத்தினர்.
இருப்பினும் அதிகாரிகளின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லாரியை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் இழுபறி நீடித்தது.
இறுதியாகப் போலீசார் சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாத வண்ணம் தடுத்த நிறுத்தலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின்னர் பலத்த பாதுகாப்புடன் அந்த லாரி மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தைச் சென்றடைந்தது. அங்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக அறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.







