சினிமா அப்டேட் , ஏப்ரல் 15 : தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘D56’ திரைப்படத்தில், நடிகை சாரா அர்ஜுன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இந்த புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், இந்த புதிய கூட்டணி குறித்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் மிக பிஸியான நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்காலிகமாக ‘D56’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை ருக்மிணி வசந்த் பரிசீலிக்கப்பட்டதாகத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர். ஆனால், கால்ஷீட் மற்றும் தேதிகள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவரால் இந்தத் திட்டத்தில் இணைய முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே, சாரா அர்ஜுனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
Also : உன்னை நினைக்காத நாள் இல்லை… மறைந்த மோனலுக்கு சிம்ரன் செலுத்திய உருக்கமான அஞ்சலி!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சாரா அர்ஜுன் புதியவர் அல்ல. ‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘சைவம்’ போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனங்களையும் வென்றவர் அவர். அதன் பின்னர் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாரா, மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நந்தினியின் இளம் வயது கதாபாத்திரத்தில் தோன்றி இந்திய அளவில் கவனம் பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்ற சாரா அர்ஜுன், தற்போது ‘D56’ படத்தின் மூலம் தமிழில் முழுநீள கதாநாயகியாக மறுபிரவேசம் செய்யவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரு புதிய விவாதமும் வெடித்துள்ளது. திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட நடிகர் தனுஷிற்கும், இளம் நடிகையான சாரா அர்ஜுனிற்கும் இடையே உள்ள வயது வித்தியாசம் தான் இந்த விவாதத்திற்குக் முதன்மைக் காரணம். இருவருக்கும் இடையே சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலான வயது வேறுபாடு இருப்பதாகக் சுட்டிக்காட்டும் சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும், இதுகுறித்து கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சினிமா என்பது ஒரு கலை வடிவம் மட்டுமே என்றும், படத்தின் கதைக்களத்திற்கும் அந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கும் இந்தத் தேர்வு பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் இதனை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதே வேளையில், இத்தகைய வயது வித்தியாசம் கொண்ட ஜோடிகளைத் திரையில் முதன்மைப்படுத்துவது தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்று மற்றொரு தரப்பினர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி கதாநாயகர்களுடன் புதிய தலைமுறை நடிகைகள் ஜோடி சேரும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தத் திரைப்படம் அந்தப் போக்கின் மீதான விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாகப் பார்த்த ஒருவரை முழுமையான கதாநாயகியாகப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதுவரை இந்தத் தகவல் பேச்சுவார்த்தை அளவிலேயே நீடித்து வருகிறது. சாரா அர்ஜுன் இந்தப் படத்தில் இணைவது குறித்தோ அல்லது மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு குறித்தோ தயாரிப்புத் தரப்போ அல்லது இயக்குநரோ இன்னும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், இன்னும் சில தினங்களில் இதுகுறித்த உறுதியான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று நம்பத்தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





