சினிமா அப்டேட் : தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே ஒட்டுமொத்த ரசிகர்களாலும் திரையுலக வர்த்தக வட்டாரங்களாலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’. நடிகர் விஜய் தனது முழுநேர அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக வெளியாகும் இறுதித் திரைப்படம் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட் எல்லையைத் தாண்டி இந்திய அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே அதன் முழு நீள HD தரப் பதிப்பு இணையதளங்களில் கசிந்திருப்பது ஒட்டுமொத்த சினிமா துறையையும் மிகக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்திரைப்படம் இன்னும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) அதிகாரப்பூர்வ சான்றிதழைப் பெறாத நிலையில் இந்த பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த அதிர்ச்சி விலகுவதற்குள் தற்போது ஒட்டுமொத்த திரைப்படமும் மிகத் துல்லியமான எச்டி தரத்தில் பைரசி இணையதளங்களில் வெளியாகியிருப்பது படக்குழுவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.200 கோடி பதுக்கல்? பறக்கும் படை அதிரடி சோதனை
ஆரம்பத்தில் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள் மட்டுமே இணையத்தில் பரவுவதாகத் தகவல் வெளியானது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒட்டுமொத்தத் திரைப்படத்தின் முழுப் பதிப்பும் முன்னணி பைரசி தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திரையரங்குகளில் கொண்டாடுவதற்குப் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு படைப்பை இப்படி இணையத்தில் கசியவிட்ட நபர்கள் மீது தயாரிப்பு நிறுவனம் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்த லீக் சம்பவத்தின் பின்னணியில் படத்தின் தணிக்கை தாமதமும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட கதைக்களம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள சில கூர்மையான அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகளுக்கு தணிக்கை வாரியம் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே படத்தின் தணிக்கை நடைமுறைகள் இழுபறியாக நீடித்து வருகின்றன. ஆரம்பத்தில் இப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்காத காரணத்தால் இதன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியப் புள்ளியாக இந்தப் படம் பார்க்கப்படுவதால் இந்தத் திடீர் கசிவு வெறும் சாதாரண பைரசி திருட்டுதானா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலா என்ற கோணத்திலும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. சினிமா வட்டாரத்தில் உள்ள ஒரு தரப்பினர் இது திட்டமிட்ட ஒரு தாக்குதலாக (Targeted Attack) இருக்கலாம் என்றும் தங்களது சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இந்தச் சம்பவத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 400 முதல் 500 கோடி ரூபாய் வரையிலான பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் தியேட்டருக்கு வரும் முன்பே கசிந்திருப்பது ஒட்டுமொத்தத் திரையுலகின் வர்த்தகத்தையும் முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் சைபர் க்ரைம் அதிகாரிகள் இணைந்து பைரசி லிங்குகளை இணையத்திலிருந்து முடக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்தத் தரவு கசிவு எங்கிருந்து யாரால் தொடங்கப்பட்டது என்பதைக் கண்டறியும் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் பைரசிக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட பிறகும் இதுபோன்ற பிரம்மாண்ட படங்கள் வெளியீட்டுக்கு முன்பே லீக் ஆவது சினிமா துறைக்கு இன்னும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கிறது என்பதை இந்தச் சமபவம் மீண்டும் நிரூபித்துள்ளது.







