வெயிலில் உயிருக்கு ஆபத்து எது? Heatstroke vs Dehydration – முக்கிய வித்தியாசங்கள் என்ன

மருத்துவ தொகுப்பு , ஏப்ரல் 9: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடப்பு கோடைகாலத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெப்ப அலைகளின்  தாக்கம் தீவிரமடைந்துள்ள சூழலில், வெயில் சார்ந்த உடல்நலப் பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் வெயிலால் ஏற்படும் ‘டீஹைட்ரேஷன்’ எனப்படும் – நீர்ச்சத்து குறைபாடு) மற்றும் ‘ஹீட்ஸ்ட்ரோக்’ எனும்  – சூரிய வெப்பத் தாக்கு ஆகிய இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

பொதுமக்களில் பலரும் இந்த இரண்டு பாதிப்புகளையும் ஒன்று என தவறாகப் புரிந்துகொள்வதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்ட தீவிரத்தன்மை கொண்டவை என மருத்துவ உலகம் தெளிவுபடுத்துகிறது.

Also : 30- 40 வயதில் Vitamin D குறைபாடு ஆபத்து: மூளை முதிர்வை வேகப்படுத்தும் அதிர்ச்சி ஆய்வு

பொதுவாக மனித உடலில் தேவையான அளவு நீர் மற்றும் உப்புகள் இல்லாத நிலையை ‘டீஹைட்ரேஷன்’ என்று அழைக்கிறோம். கோடைகாலத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் போவது மற்றும் நீண்ட நேரம் நேரடி வெயிலில் வேலை செய்வது போன்ற காரணங்களால் உடலில் நீர் இருப்பு குறைகிறது. வாய் உலர்ந்து போதல், கடுமையான சோர்வு, தலைச்சுற்றல், சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல் மற்றும் கடுமையான தலைவலி ஆகியவை இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இது ஆரம்பத்தில் மிதமான அல்லது நடுத்தரமான பாதிப்பாகவே தொடங்கும் என்பதால், பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக நிழலான இடத்திற்கு மாறி, அதிகளவில் தண்ணீர் மற்றும் இளநீர் அல்லது ஓஆர்எஸ் (ORS) போன்ற திரவ உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதிலிருந்து எளிதாக மீள முடியும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக ‘ஹீட்ஸ்ட்ரோக்’ என்பது உடலின் உள் வெப்பநிலை கட்டுப்பாட்டை இழந்து, மிக ஆபத்தான நிலையை எட்டும் ஒரு அவசர மருத்துவச் சூழலாகும் (Medical Emergency). மனித உடலின் வெப்பநிலை திடீரென 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி ஃபாரன்ஹீட்) கடக்கும்போது உடலால் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ள முடியாமல் போகிறது.

உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருத்தல், வியர்வை முழுமையாக நின்றுபோய் சருமம் வறண்டு சூடாக மாறுதல், கடுமையான வாந்தி, நெஞ்சு படபடப்பு மற்றும் இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவற்றுடன் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான மனக்குழப்பம் அல்லது மயக்க நிலை உண்டாவது ஹீட்ஸ்ட்ரோக்கின் முதன்மை அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்ட உடனேயே பாதிக்கப்பட்ட நபரை தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்விரண்டிற்கும் இடையே உள்ள முதன்மையான வித்தியாசம் அவற்றின் தீவிரத்தன்மையே ஆகும். டீஹைட்ரேஷன் என்பது உடலின் எச்சரிக்கை மணி போன்ற ஒரு ஆரம்ப நிலை கோளாறு; ஆனால் ஹீட்ஸ்ட்ரோக் என்பது உடலின் உள் உறுப்புகளை செயலிழக்கச் செய்யக்கூடிய ஒரு உயிராபத்தான நிலை. டீஹைட்ரேஷனால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் வியர்க்கும்; ஆனால் ஹீட்ஸ்ட்ரோக் பாதிப்பில் வியர்வை சுரப்பிகள் செயலிழந்து வியர்வை முற்றிலுமாக நின்றுவிடும். அத்தோடு ஹீட்ஸ்ட்ரோக் நிலையில் உள்ள நபர் தங்களைச் சுற்றி நடப்பவற்றை அறிய முடியாத குழப்பமான மனநிலைக்குத் தள்ளப்படுவார்.

தற்போது நிலவி வரும் கடுமையான வெப்ப சூழலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் கோடைகாலத்திற்கு உகந்த பருத்தி ஆடைகளை அணிவதுடன், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அசாதாரண உடல் மாற்றங்களை முன்கூட்டியே கவனித்து அதற்கேற்ப முதலுதவிகளை செய்வதும், தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ உதவியை நாடுவதுமே கோடைகால பாதிப்புகளில் இருந்து உயிரைக் காப்பதற்கான ஒரே வழிமுறையாகும்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *