
புதுச்சேரி , ஏப்ரல் 3: இந்தியாவின் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வரும் சூழலில் ,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு ,கேரளா ,மேற்குவங்கம் ,அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ,தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து ,கூட்டணிகளை இறுதி செய்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ,தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். புதுச்சேரி நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில் அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை சுமார் 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பிரம்மாண்ட ரோட்ஷோ (Roadshow) நடைபெற்றது. திறந்த வாகனத்தில் பயணித்தவாறு பிரதமர் மோடி பொதுமக்களை நோக்கி கையசைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
சுமார் 35 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த வீதி உலா நிகழ்வில் ,சாலையின் இருபுறங்களிலும் பெருந்திரளான பொதுமக்கள் ,பெண்கள் ,குழந்தைகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுங்கிலும் மலர்களைத் தூவியும் ,பாரம்பரிய மேள தாளங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடனும் தொண்டர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது ,புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி ,பாஜாக மாநிலத் தலைவர் வ.பி. ராமலிங்கம் மற்றும் உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் ஆகியோர் பிரதமருடன் உடனிருந்தனர். பிரதமரின் வருகையை ஒட்டி ,புதுச்சேரி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் உட்பட 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த ரோட்ஷோ நிகழ்வைத் தொடர்ந்து ,புதுச்சேரியில் நடைபெற உள்ள முக்கிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்தப் பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மற்றும் தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ,மத்தியில் உள்ள அதே கூட்டணி மாநிலத்திலும் அமைந்தால் மட்டுமே தொடர் வளர்ச்சியை எட்ட முடியும் என்கிற ‘இரட்டை எஞ்சின் அரசு’ (Double-Engine Government) என்ற முழக்கத்தை முன்வைத்து பாஜக கூட்டணி தனது பிரசாரத்தை நகர்த்தி வருகிறது.







