நெல்லை , ஜூன் 21:நெல்லை தச்சநல்லூரில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அதன் முக்கிய நிர்வாகி பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் பல்வேறு அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழகத்தில் ஒரு காலத்தில் மது மற்றும் சாராயம் என்று இருந்த நிலை மாறி தற்போது போதை கலாச்சாரம் இளைஞர்களிடையே மிக மோசமாக ஊடுருவியுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். இந்த பேராபத்தை தற்போதைய தமிழக அரசு இன்னும் சரியாக உணரவில்லை என்றும் ஏதோ ஒரு சிலரைக் கைது செய்வதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக ஆட்சியாளர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இளம் தலைமுறையினரை இந்த போதை அரக்கனிடமிருந்து மீட்கும் நோக்கில் வரும் ஜூலை மாதம் முழுவதும் ‘வி தி லீடர்ஸ்’ பவுண்டேஷன் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் உச்சகட்டமாக வரும் ஜூலை 19ஆம் தேதி திருச்செந்தூரில் போதைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
NEET தேர்வு பயத்தால் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
அமைப்பின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய பிரபாகரன் தங்களின் அமைப்பில் பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் அனுபவம் வாய்ந்த திறமையாளர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ‘வி தி லீடர்ஸ்’ சார்பில் நூறு விழுக்காடு இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் இது கட்சியாகப் பதிவு செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாது என்றாலும் அடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் இந்த அமைப்பு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாகப் பரிணமித்து தனித்துப் போட்டியிடுவது உறுதி என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தங்களை பாரதிய ஜனதா கட்சியின் ‘பி டீம்’ என்று தமிழக அரசு தொடர்ந்து விமர்சித்து வருவதை அவர் மறுத்தார். அரசியல் களத்தில் புதியதாக வரும் அமைப்புகளை இப்படி விமர்சிப்பது ஒன்றும் புதியதல்ல என்று குறிப்பிட்ட அவர் தாங்கள் யாருடைய நிழலிலும் இயங்கவில்லை என்றார். மத்திய அரசின் நல்ல திட்டங்களைப் பாராட்டுவோம் என்றும் அதே வேளையில் தமிழகத்தின் உரிமைக்காகவும் தமிழ் உணர்வுக்காகவும் மத்திய அரசிடமிருந்து எங்கே மாறுபட வேண்டுமோ அங்கே மாறுபட்டு நிற்போம் என்றும் விளக்கம் அளித்தார். தங்களின் செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு தாங்கள் யாருடைய ‘பி டீம்’ அல்ல தனித்து இயங்கும் ‘ஏ டீம்’ என்பதை மக்களே புரிந்துகொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதை மனமாற வரவேற்பதாகக் குறிப்பிட்ட பிரபாகரன் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அவர் வாய்ப்பளிப்பது பாராட்டத்தக்கது என்றார். அதே வேளையில் தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளுக்கு எதிராக மக்களைத் தயார்படுத்தி அவர்களின் மனங்களை மாற்றிய பெருமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையையே சாரும் என்று அவர் வாதிட்டார்.
அண்ணாமலை தனது நடைப்பயணங்கள் மூலமும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டதன் மூலமும் திராவிடத்திற்கு எதிராக எதை விதைத்தாரோ அதைத்தான் இன்று விஜய் அறுவடை செய்து கொண்டிருக்கிறார் என்று பிரபாகரன் விமர்சித்தார். தமிழகத்தில் திராவிட ஆட்சிக்கு எதிராகப் பயந்து தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்ட இல்லத்தரசிகளின் வாக்குகளும் இளைஞர்களின் வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக்கு வந்திருக்க வேண்டியவை என்றார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எடுத்த சில தப்பான கூட்டணி முடிவுகளால் அந்த வாக்குகள் விஜய்க்குச் சென்றுவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனவே விஜய்க்கு விழுந்த வாக்குகளில் பாதி அண்ணாமலைக்குச் சேர வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகத் தெரிவித்தார்.
முன்னதாக நெல்லை மாநகர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ‘வி தி லீடர்ஸ்’ அறக்கட்டளையின் சார்பில் போதை கலாச்சாரத்திற்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர்.







