வில்லிவாக்கம்,, மே 14: வில்லிவாக்கத்தில் போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம் டிரக்ஸ் கல்ச்சருக்கு கடும் எச்சரிக்கை.. “இன்னைக்கே கைது செய்யுங்கள்” – போலீசுக்கு அதிரடி உத்தரவு, டாஸ்மாக் மற்றும் பார் விவகாரத்தில் பரபரப்பு
வில்லிவாக்கம் தொகுதியில் பெண்கள் பாதுகாப்பு, டிரக்ஸ் கல்ச்சர், டாஸ்மாக் கடைகள் மற்றும் அனுமதியில்லா பார்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த குறைகளை தொடர்ந்து, போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும், புகார் அளிக்க வரும் ஒவ்வொரு பெண்களுக்கும் வெளிப்படையான பாதுகாப்பு சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் பிரச்சார காலத்தில் மக்கள் மத்தியில் நேரடியாக சென்று கேட்கப்பட்ட குறைகளில் முக்கியமானதாக டிரக்ஸ் கல்ச்சர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி நேரமும், மாலை 5 மணி நேரமும் நடந்து சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது, பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அதிகமாக வந்த புகார் டிரக்ஸ் விற்பனை மற்றும் அதனால் உருவாகும் பாதுகாப்பு அச்சம் தான் என கூறப்பட்டுள்ளது. “பெண்கள் எந்த தெருவிலும் நிம்மதியாக நடமாட முடியாத நிலை உருவாகி இருக்கிறது” என்ற பொதுமக்களின் கருத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
also read: ஒட்டன்சத்திரம் பெண்ணின் 3 பவுன் நகை மாயம்! பிரேத பரிசோதனைக்கு சென்ற வழியில் நகை திருட்டு.. அதிர்ந்த போலீஸ்!
இதையடுத்து, டிரக்ஸ் விற்பனையில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “டிரக்ஸ் கல்ச்சரை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். விற்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்” என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது இதன் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் மொத்தம் 11 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாகவும், அதில் ஒன்று முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள், கோயில்கள் மற்றும் விடுதிகள் அருகே இன்னும் சில கடைகள் செயல்பட்டு வருவது மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற ரிவியூ மீட்டிங்கில் விரிவாக பதிவு செய்யப்பட்டதாகவும், 11 கடைகளில் குறைந்தபட்சம் 6 கடைகளை “போர்கால அடிப்படையில்” மூட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மட்டும் அல்லாமல், “பிளாக்” முறையில் செயல்படும் பல பார்களும் வில்லிவாக்கம் பகுதிகளில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், சில இடங்களில் மதியம் 12 மணிக்கே கடைகள் செயல்படத் தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அனுமதியில்லா பார்கள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை “இன்னைக்கு நைட்டுக்குள்ள” கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் நேரடியாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றும், பெண்கள் புகார் அளிக்க வரும் நேரங்களில் கேமரா செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போலீசில் யார் புகார் அளித்தாலும் அந்த entire complaint process வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கும், புகார் பெறும் அதிகாரிகளுக்கும் இடையே வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் என்றும், எதிர்காலத்தில் எந்தவித சர்ச்சைகளும் உருவாகாமல் தடுக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஒரு தனி IT Wing ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டால், இருதரப்பினருக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சூழல் உருவாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “புகார் கொடுக்க வரும் பொதுமக்களும், புகார் வாங்கும் அதிகாரிகளும் வெளிப்படையான முறையில் செயல்பட்டால் நாளை எந்த பிரச்சனையும் வராது” என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.













