சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லி மேலிடத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும்,தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பிராந்திய அபிலாஷைகளை முன்னிறுத்தி,‘கள அரசியல்’ (Cult politics) இல்லாத ஒரு புதிய அரசியல் இயக்கத்தை மக்களின் பங்களிப்போடு தொடங்கவிருப்பதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விலகல் குறித்து,பாஜக தேசிய இணைப் பொதுச் செயலாளர் நிதின் நபீனுக்கு அண்ணாமலை விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,கடந்த 18 மாதங்களாக கட்சியின் உயர்மட்டத் தலைமையுடன் தமக்கு இருந்த கொள்கை முரண்பாடுகளை அவர் வெளிப்படையாகப் பட்டியலிட்டுள்ளார். தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மொழியில் பேசவில்லை என்றும்,கட்சியின் உள்வட்டாரங்களிலும் வெளியிலும் பல்வேறு சவால்களையும் முட்டுக்கட்டைகளையும் தாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாட்டு வேர்களுடனும்,பிராந்திய முக்கியத்துவத்துடனும் கூடிய ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்பிய தனக்கு,மத்திய தலைமையின் அணுகுமுறை உடன்பாடாக அமையவில்லை என்றும்,அதன் காரணமாகவே கூடுதல் சுமையை ஏற்படுத்த விரும்பாமல் விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
Also read: தாவூத் இப்ராஹிம் மிரட்டல்; மகன் கடத்தல்: அதிர்ச்சி உண்மைகளை உடைத்த லலித் மோடி
தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் கடந்தகாலப் பயணம் குறித்து சமூக வலைத்தளம் வழியாக நேரலையில் பேசிய அண்ணாமலை,பல்வேறு முக்கியத் தகவல்களையும்,இதுவரை வெளிவராத சில அரசியல் பின்னணிகளையும் பகிர்ந்துகொண்டார். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து,ஐ.ஐ.எம் லக்னோவில் பயின்றுகொண்டிருந்த போது,கடந்த 2009-ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கீழ் மூன்று மாத காலம் அரசியல் பயிற்சி பெற்றதே தனது அரசியல் வாழ்வின் தொடக்கம் என்று அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர்,ஆறு ஆண்டுகள் பாஜகவில் பயணித்து,தற்போது 42 வயதில் 17 ஆண்டுகால பொதுவாழ்வுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாக அவர் விவரித்தார்.
கடந்த 2020 ஆகஸ்ட் 24 அன்று தான் பாஜகவில் இணைவதற்கு முந்தைய நாள் நடந்த சுவாரசியமான பின்னணி ஒன்றையும் அவர் இந்த நேரலையில் உடைத்தார். டெல்லியில் பாஜகவில் இணையவிருந்த வேளையில்,நடிகர் ரஜினிகாந்த் தனக்குத் தொலைபேசி வாயிலாக அழைத்து,தமது அரசியல் இயக்கத்தில் இணையுமாறு கோரிக்கை விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாட்டின் நலனுக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே நல்லது என்றாலும்,அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கு நல்லது என்று தான் அப்போது எண்ணியதாகக் குறிப்பிட்டார். அதோடு,பாஜகவின் மூத்த தலைவர் சந்தோஷ் அவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்ற காரணத்தால்,ரஜினிகாந்தின் வேண்டுகோளை மறுத்துவிட்டு,மறுநாள் பாஜகவில் இணைந்ததாகவும்,பின்னர் அதற்காக ரஜினிகாந்திடம் நேரில் மன்னிப்பு கோரியதாகவும் அண்ணாமலை விவரித்தார். தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில்,திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தனித்துவமான தமிழ் அடையாளத்துடன் பாஜக களம் காண வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் முடிவை முன்னெடுத்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.
Also read : 436 தொலைநோக்கு திட்டங்கள்: முதல்வர் விஜய் தலைமையில் முதல் முழு அமைச்சரவைக் கூட்டம்
தனது புதிய அரசியல் இயக்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய அவர்,தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு தற்போதைய அரசியல் மொழியும் இலக்கணமும் மாற வேண்டும் என்றார். ஒரு குறிப்பிட்ட தலைவரை மட்டும் சார்ந்து இயங்கும் ‘கல்ட் அரசியல்’ கலாச்சாரத்தை உடைத்து,சாமானிய மக்களின் பங்களிப்புடன் கூடிய தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை (Clean and Honest Governance) உருவாக்குவதே தனது இலக்கு என்று அவர் பிரகடனப்படுத்தினார். முதலமைச்சரோ அல்லது சில அமைச்சர்களோ மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தையும் மாற்றிவிட முடியாது என்றும்,ஊராட்சித் தலைவர் முதல் மேயர் வரை அனைத்து உள்ளாட்சிப் அமைப்புகளிலும் தகுதியான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
குறிப்பாக,வாரிசு அரசியலையும் நிரந்தரப் பதவிகளையும் ஒழிக்கும் நோக்கில்,தனது புதிய இயக்கத்தில் ‘பதவிக் கால வரம்பு’ (Term Limit) என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்படும் என்றும்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை முறை தங்களது பதவிகளில் நீடிக்கலாம் என்ற கட்டுப்பாட்டைத் தனக்கு முதற்கொண்டு அனைவருக்கும் பொதுவானதாக அமல்படுத்தப் போவதாகவும் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.








