சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அளித்த ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவரது விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகக்கூடும் என்றும் அவர் தனியாகப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.இந்த யூகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்குச் சென்றிருந்த அண்ணாமலை அங்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.குறிப்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீனைச் சந்தித்து பாஜாகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அவர் முறைப்படி சமர்ப்பித்தார்.
Also read : CM விஜய் தலைமையில் முதல் கேபினட் கூட்டம்: முக்கிய முடிவுகள்!
டெல்லி பயணத்தின் போது தனது இந்த அரசியல் முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் அண்ணாமலை நேரில் சந்தித்து விளக்கியுள்ளார்.இந்தச் சந்திப்புகளின் போது அவர் தனது அடுத்தகட்ட முடிவுகளுக்குத் தேசியத் தலைவர்களிடம் வாழ்த்துப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி மக்களிடம் உரையாற்றப் போவதாக அண்ணாமலை திடீரென அறிவித்திருந்தார்.அவர் மக்களைச் சந்திப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியைத் துறந்து பாஜாகவில் இணைந்த அண்ணாமலை மிகக் குறுகிய காலத்திலேயே கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்தார்.கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அப்போதைய அரசியல் சூழலில் அவரது தீவிரமான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு கட்சியின் தேசியத் தலைமை அவருக்குத் தமிழ்நாடு மாநிலத் தலைவர் என்ற உயரிய பொறுப்பை வழங்கியது.
மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள் பல்வேறு போராட்டங்கள் பாதயாத்திரை மற்றும் தொடர் செய்தியாளர் சந்திப்புகள் மூலமாகப் பாஜகவை பரவலாகக் கொண்டு சேர்க்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.இருப்பினும் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது.அதன் தொடர்ச்சியாக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எழுந்தபோது அதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்றும் அது தொடர்பாக அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது.தேர்தல் காலக் கட்டத்திலேயே அவர் தனது மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பாஜகவில் இருந்து அண்ணாமலையின் விலகல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் ஒரு முக்கியக் கட்டம் எட்டப்பட்டுள்ளது.இன்று மதியம் அவர் மேற்கொள்ளவிருக்கும் சமூக வலைத்தள நேரலை உரையில் புதிய கட்சி தொடங்குவது குறித்தும் தனது அடுத்தகட்ட அரசியல் பாதை குறித்தும் அவர் இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.








