சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.\

image 523

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கார் சாகுபடி பாசனத்திற்காக, ஜூன் 1-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றிலிருந்து வழக்கம்போல தண்ணீர் திறந்துவிடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் தலைமையில், இப்பகுதியைச் சேர்ந்த திரளான விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இரா.ஆவுடையப்பன், தென் மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசியதாவது:

ALso Read : ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக 11 வயதில் விற்கப்பட்ட சிறுமி… இந்தியாவையே நடுங்க வைத்த “பூலான் தேவி” ஆன கதை!”

ஜூன் 1-ல் தண்ணீர் திறக்கக் கோரிக்கை

“நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும், நெல்லை – தூத்துக்குடி மாவட்ட விவசாய நிலங்களின் பாசனப் பரப்பையும் பூர்த்தி செய்வதில் தாமிரபரணி ஆற்றுப் பாசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாபநாசம் அணையிலிருந்து கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோட்டை மேலழகியான் கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்தக் கால்வாய்களை மட்டுமே நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இப்பகுதியில் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாகத் தொய்வின்றிப் பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை, இந்த ஆண்டும் எவ்விதத் தடையுமின்றித் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெறும் 30 அடியாகக் குறைந்திருந்த சூழலிலும் கூட, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஜூன் 1-ஆம் தேதியே பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதே போன்றதொரு மக்கள் நல நடவடிக்கையை தற்போதைய அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.”

“நீதி பரிபாலனத்திற்கு முரணான சபாநாயகரின் செயல்”

தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல் மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்:

“தமிழக சட்டப்பேரவையின் தலைவருக்கு சபை சார்ந்த நீதி பரிபாலனம் செய்யும் உச்சகட்ட அதிகாரமும், நிர்வாக ரீதியிலான முழு அதிகாரமும் அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், அ.தி.மு.க-வின் ஒரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் ஏற்கனவே விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கொறடாவை நியமிக்கும் இறுதி அதிகாரம் சபாநாயகருக்கு இருந்தாலும், ஒரு கட்சியின் தலைமை வழங்கும் கடிதத்தின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுக்க முடியும். கொறடா உத்தரவை மீறிய விவகாரத்தில் மனு அளிக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அந்தத் தகுதி நீக்கக் கோரிக்கை மனு சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ள சூழலில்தான், நேற்று 3 சட்டமன்ற உறுப்பினர்களும், இன்று மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ளனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் அந்த ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக அளிக்கப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, அதற்குப் பின் பெறப்பட்ட ராஜினாமா கடிதங்களை மட்டும் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டிருப்பது சட்ட விதிகளுக்கும், நீதி பரிபாலன முறைக்கும் எதிரானது. இது அப்பட்டமான முரண்பாடாகும்.

சபாநாயகரின் இந்த ஒருதலைப்பட்சமான மற்றும் முரணான நடவடிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினர் தாராளமாக நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர முடியும். தற்போதைய சபாநாயகரின் செயல்பாடுகள் சட்டப்பேரவையின் உன்னத மரபுகளுக்கு உகந்ததாக இல்லை” என்று இரா.ஆவுடையப்பன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »