தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?

image 345

சென்னை, May 16: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக முதல்வரையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, எந்தெந்த அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் வழங்கப்படும் என்ற நிர்வாக ரீதியிலான எதிர்பார்ப்புகள் நீடித்து வந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய இலாக்கா ஒதுக்கீட்டின்படி, முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய துறைகளைத் தன் வசம் வைத்துள்ளார். வழக்கமாக தமிழக முதலமைச்சர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம் ஆகியவற்றுடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளும் நேரடியாக முதலமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் மகளிர், இளைஞர் மேம்பாட்டுத் துறைகளை முதலமைச்சர் தன் வசம் எடுத்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தையும், அடிப்படை மக்கள் நலத்திட்டங்களையும் அவர் நேரடியாகக் கண்காணிக்கத் திட்டமிட்டிருப்பதைக் காட்டுகிறது.

Also read : இலங்கை எம்.பி: “இது நாளத்தான் சீமானுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கல..”

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாடு போன்ற முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்றொரு முக்கிய அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் சாலை மேம்பாடு, புதிய உள்கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு வளங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பொறுப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, டாக்டர் கே.ஜி. அருண்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் தரம், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவை இனி இவரது நிர்வாகத்தின் கீழ் செயல்படும். அதேபோல, மாநிலத்தின் பொருளாதாரத்தை வழிநடத்தும் மிக முக்கியத்துவமிக்க நிதித்துறை, மூத்த சட்டமன்ற உறுப்பினரான கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் திட்டங்கள், பட்ஜெட் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவற்றை இவர் கவனிப்பார்.

அமைச்சரவையில் சவாலான துறையாகப் பார்க்கப்படும் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பேற்ற பின் ஊடகங்களைச் சந்தித்த அவர், கடந்த 25 ஆண்டுகளில் மின்சாரத்துறை மிகப்பெரிய சவால்களைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு மின்சாரத்துறையின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாகவும், தற்போது இத்துறை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மின்சார வாரிய ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது, அடிப்படை கட்டமைப்பு சீர்குலைவு மற்றும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது போன்ற பிரச்சனைகளை அவர் சுட்டிக்காட்டினார். 44 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான முறைகேடு விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தைச் சுயசார்பு மாநிலமாக (Self Sustainable State) மாற்றும் நோக்கில், உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக உறுதியளித்தார். மேலும், தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட 500 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், உரிய ஆய்வுகளுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி மற்றும் மொழ மேம்பாட்டுத் துறையான பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் விளம்பரத்துறை ஆகியவை அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன், தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களும் இவரது துறையின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும், செல்வி கீர்த்தனாவுக்கு தொழில்துறையும், டாக்டர் பிரபுவிற்கு இயற்கை வளங்கள் மற்றும் சுரங்கத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் புதிய முதலீடுகள் மற்றும் இயற்கை வள நிர்வாகத்தை மேம்படுத்தும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாக 10 பேருக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1253

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »