உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

நெல்லை , ஜூன் 15 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,விவசாயிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில் வந்த மானூர் ஒன்றியம் ,கானார்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ,தங்களது தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டச் செயலாளர் ஆபிரகாம் ,விவசாயத் துறையில் தற்போது நிலவி வரும் கடுமையான நெருக்கடிகளைப் பட்டியலிட்டார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ,அடுத்த பருவத்திற்கான சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காகப் பாசன அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உழவு மற்றும் நடவுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ,உரங்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு: ஊழியர்கள் அவதி

குறிப்பாக ,சந்தையில் இதுவரை 1300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை உரத்தின் விலை ,தற்பொழுது ஒரே நேரத்தில் 800 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு ,2100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். தனியார் உர நிறுவனங்கள் தன்னிச்சையாக மேற்கொண்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வால் ,சாகுபடிச் செலவு கட்டுப்படியாகாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

ஒருபுறம் முதலீட்டுச் செலவுகள் இவ்வாறு பன்மடங்கு உயர்ந்து வரும் நிலையில் ,மறுபுறம் விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் பொருட்களுக்கான சந்தை விலை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ,விவசாயிகளின் பிரதான விளைபொருளான நெல்லுக்கான கொள்முதல் விலையில் வெறும் பத்து ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது ,விவசாயிகளின் உழைப்பை ஏளனம் செய்வது போல் உள்ளதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட ஆபிரகாம் ,கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போதுதான் விவசாயிகள் தற்போதைய நஷ்டத்தில் இருந்து மீண்டு ,அடுத்த பருவத்திற்கான விவசாயப் பணிகளைத் தொய்வின்றித் தொடர முடியும் என்றும் அவர் விளக்கினார்.

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் ,தவறும்பட்சத்தில் அடுத்தகட்டமாக மாநிலத்தின் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி ,மிக விரைவில் மாவட்ட அளவில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரித்தார். உர விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் ,நெல் கொள்முதல் விலையை முறைப்படுத்தவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1371

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »