நெல்லை ,ஜூன் 15 : திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கழிவறைகள் முறையான பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவதோடு ,எலிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதால் அரசு ஆவணங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய நிர்வாக மையமாக விளங்கும் இந்த ஆட்சியர் அலுவலக வளாகம் மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமன்றி ,மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களின் அறைகள் ,தனி வட்டாட்சியர் அலுவலகங்கள் ,மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் காரணமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும் ,பல்வேறு தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக ,வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமின்போது ,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான மக்களின் வருகையால் இந்த வளாகம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.
also : உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
இவ்வாறு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வசதிக்காக இந்த நான்கு தளங்களிலும் தனித்தனியாகக் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ,தற்போது இந்த கழிவறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் முற்றிலும் சிதலமடைந்து ,சுகாதாரச் சீர்கேட்டின் உச்சமாகத் திகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ,முதலாவது மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. இவற்றில் பல கழிவறைகள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதால் ,அவற்றைப் பூட்டிவிட்டு பழைய நாற்காலிகள் ,மேஜைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அடுக்கி வைக்கும் குடோனாக அதிகாரிகள் மாற்றி வைத்துள்ளனர். பயன்பாட்டில் இருக்கும் ஒரு சில கழிவறைகளிலும் குழாய்களில் தண்ணீர் ஒழுகுவது ,கழிவறை கோப்பைகள் உடைந்திருப்பது எனப் பல்வேறு குறைபாடுகள் நீடிக்கின்றன.
இதைவிட அவலமாக ,மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காகத் தனித்துவமாக அமைக்கப்பட்ட சிறப்பு கழிவறையும் மிக மோசமாகச் சிதைந்துள்ளது. அதன் கதவுகள் உடைந்திருப்பதால் ,அதைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் கழிவறைக்குச் செல்லும்போது கதவை வெளிப்புறமாகப் பூட்ட முடியாமல் ஒரு கயிற்றைக் கட்டி ,உள்ளே இருந்தபடி கயிற்றைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். முறையான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் ,இந்த கழிவறைப் பகுதிகள் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ,நாள் முழுவதும் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றும் அரசு ஊழியர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இவற்றுடன் ,ஆட்சியர் அலுவலகத்தின் மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக எலிகளின் தொல்லை உருவெடுத்துள்ளது. கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் எலிகளின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ,கீழ்த்தளத்தில் உள்ள வரவேற்பறையின் மேல் பகுதி மற்றும் சுவர்களில் உள்ள பொந்துகளிலிருந்து எலிகள் கூட்டம் கூட்டமாகச் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. இந்த எலிகள் அலுவலக அறைகளுக்குள் புகுந்து ,அங்குள்ள முக்கியக் கோப்புகளையும் ,வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஆவணங்களையும் கடித்துக் குதறிச் சேதப்படுத்தும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதும் ,நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் மாவட்ட நிர்வாகத்தின் ,குறிப்பாக மாவட்ட ஆட்சியரின் முதன்மைக் கடமையாகும். ஆனால் ,ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் வழிகாட்ட வேண்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இந்த அளவிற்குச் சுகாதாரச் சீர்கேடும் அலட்சியமும் நிலவுவது ,அங்கு வரும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும் முகம் சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே ,நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் ,தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த முதன்மை அலுவலக வளாகத்தில் உடனடியாக நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பழுதடைந்துள்ள கழிவறைகளைச் சீரமைக்கவும் ,மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உறுதி செய்யவும் ,கோப்புகளைப் பதம் பார்க்கும் எலிகளை ஒழிக்கவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சுகாதாரச் சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.







