Chennai ,June 15 : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து ,அதிமுகவிலிருந்து விலகி ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தாவெக) அரசில் இணைந்த நான்கு முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரம் இப்போது நீதிமன்றப் படியாக ஏறியிருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள சூழலில் ,அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரியும் ,அந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 13ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் தலைமையிலான தாவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தியது. இந்த வாக்கெடுப்பின் போது ,அதிமுக முன்னாள் அமைச்சர் சி. செண்பகம் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் கட்சித் தலைமையின் கொறடா உத்தரவை மீறி ,ஆளும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தச் செயல் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ,கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் முறைப்படி மனு அளித்தார்.
also : அதிமுகவில் ‘ஈபிஎஸ் மகன்’ விவகாரம் தீவிரம்: சி.வி.சண்முகம் – பசுபதி மோதலால் அதிமுகவில் பரபரப்பு
இந்த மனு மீது சபாநாயகர் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் அது நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ,அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 25 எம்எல்ஏக்களில் நான்கு பேர் திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ குமரகதம் குமாரவேலு ,பெருந்துறை தொகுதி ஜெயகுமார் ,தாராபுரம் தொகுதி சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி இசைக்கி சுப்பையா ஆகிய அந்த நான்கு பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்தனர். அவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக தாவெக கட்சியிலும் இணைத்துக் கொண்டனர்.
இவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் உடனடியாக அன்றைய தினமே ஏற்றுக்கொண்டு உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த உத்தரவுக்கு எதிராகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். தகுதி நீக்கப் புகார் நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை ஏற்றது தவறு என்றும் ,அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி நீதிமன்றத்தில் ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தரப்பிலும் ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கோரும் புகார் சபாநாயகரின் பரிசீலனையில் இருக்கும்போது ,அவர்கள் தாக்கல் செய்த ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் அங்கீகரித்தது சட்டப்படி செல்லாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ,அந்த நான்கு பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ,அதுவரை மதுராந்தகம் ,பெருந்துறை ,தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு எதையும் தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக கோரியுள்ளது. மேலும் ,இந்த மனுவுக்கு விரைவில் எண்கள் வழங்கி ,ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள எம்.எல். ரவியின் பொதுநல வழக்குடன் சேர்த்து அவசரகால வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜகோபால் வலியுறுத்தினார்.
இதற்கிடையே ,தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் குறுக்கிட்டு அரசின் விளக்கத்தைப் பதிவு செய்தார். சம்பந்தப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் எந்தவிதமான கட்டாயமோ அல்லது நிர்பந்தமோ இன்றி ,தங்களது சுய விருப்பத்தின் பேரிலேயே பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ,அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த போதிலும் ,அவர்களுக்கு எதிராக அதிமுக அளித்த தகுதி நீக்கப் புகார் தொடர்பாகச் சபாநாயகர் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றும் ,சட்டமன்ற விதிகளின்படி அவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்ந்து முறைப்படி எடுக்கப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதிப்படத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி அமர்வு ,அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி தொடர்ந்த வழக்கோடும் ,அதிமுக தரப்பில் புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவோடும் சேர்த்து இரண்டு விவகாரங்களையும் நாளை மறுநாள் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். சபாநாயகரின் அதிகாரம் ,தகுதி நீக்கப் புகாரின் சட்ட அங்கீகாரம் மற்றும் இடைத்தேர்தல் தடை போன்ற முக்கிய அம்சங்கள் இதில் அடங்கியிருப்பதால் ,நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த கூட்டு விசாரணை தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.







