
Chennai , May 8: தமிழக வெற்றி கழகத்திற்கு CPI ஆதரவு அறிவிப்பு வெளியான நிலையில், தேமுதிகவும் பேச்சுவார்த்தையில் இணைந்ததாக தகவல் வெளியாகி அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படும் அரசியல் நகர்வுகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன. தமிழக வெற்றி கழக தலைவர் Vijay ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடன், தேமுதிகவுடனும் தமிழக வெற்றி கழகம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கியுள்ளன. குறிப்பாக 2016 தேர்தலில் பேசப்பட்ட “மக்கள் நல கூட்டணி” மாதிரியான ஒரு புதிய அணிக்கட்டமைப்பு மீண்டும் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More to Read : தவெகவுக்கு கைகொடுக்கிறதா CPM-CPI?.. விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்
தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் Vijay இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருப்பதால், ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் TVK-வின் நேரடி பலம் 107 ஆக குறைகிறது.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் தற்போது விஜய் அணிக்கு ஆதரவாக இருப்பதால், கூட்டணியின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது இரண்டு எம்எல்ஏக்களுடனும் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் TVK கூட்டணியின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தேமுதிகவுடன் பேச்சு?.. அரசியல் கணக்கில் புதிய திருப்பம்
இந்த சூழலில் மிக முக்கியமாக பேசப்படுவது தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை. Premalatha Vijayakanth தரப்புடனும் தொடர்பு தொடங்கியிருப்பதாக கூறப்படும் தகவல்கள், அரசியல் சமன்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக, CPI, CPM, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்தன. தற்போது அதே மாதிரியான அரசியல் அணிச்சேர்க்கை மீண்டும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக திமுகவின் அணிச்சேர்க்கை முயற்சிக்கு இது பின்னடைவாக அமையலாம் என்ற மதிப்பீடும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
CPM மற்றும் VCK என்ன முடிவு எடுக்கும்? தற்போது தமிழக அரசியலில் அனைவரின் கவனமும் CPM மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவின் மீது திரும்பியுள்ளது. CPI ஆதரவு அறிவிப்புக்குப் பிறகு, CPM-மும் அதே பாதையை தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தலைமையிலான TVK கூட்டணிக்கு தற்போது மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும் நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, TVK நிர்வாகி நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்திப்பு நடத்தியதாக கூறப்படும் தகவலும் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.





