அதிமுக தலைமைக்கு எதிராக சி.விஜயபாஸ்கர் ட்வீட்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்று கட்சியில் இணைய வாய்ப்பு?

சென்னை , ஜூன் 16 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மீண்டும் ஒருமுறை தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களாகத் தனது சமூக ஊடகப் பக்கமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டு வரும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது.

Former AIADMK Minister C. Vijayabaskar's tweet against party leadership fuels speculation over MLA resignation and possible switch to a rival political party.

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.விஜயபாஸ்கருக்கும் இடையே கடந்த சில காலமாகவே சுமுகமான சுழல் நிலவவில்லை.ஏற்கனவே தலைமைக்கு எதிராகச் சில நிலைப்பாடுகளை எடுத்திருந்த விஜயபாஸ்கர் பின்னர் அதற்காகத் தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் வழங்கிவிட்டுத் தனது சட்டமன்ற உறுப்பினர் பணியைத் தொடர்ந்து வந்தார்.இருப்பினும் கட்சிக்குள் அவருக்குச் சரியான அங்கீகாரமோ அல்லது முக்கியப் பொறுப்புகளோ வழங்கப்படவில்லை என்ற குமுறல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.இந்த அதிருப்தியான சூழலில்தான் தற்போது மீண்டும் தலைமைக்கு எதிரான மறைமுகத் தாக்குதலை அவர் தொடங்கியுள்ளார்.

நேற்றைய தினம் அவர் வெளியிட்ட பதிவில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களையும் எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும் கேள்வி கேட்பதைக் குற்றமாகக் கருதக்கூடிய அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும் ஒரு வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல மாறாக எத்தனை பேரை ஒன்றிணைத்தோம் மற்றும் எத்தனை களங்களை வென்றெடுத்தோம் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறி ‘லீடர்ஷிப் மேட்டர்ஸ்’ (Leadership Matters) என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார்.இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய கட்சி நடவடிக்கைகளையும் நீக்கங்களையும் விமர்சிக்கும் நோக்கில் அமைந்ததாகவே பார்க்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக மீண்டும் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.அதில் தலைமை என்பது அதிகாரமோ ஆணவமோ அல்ல என்றும் அது அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு என்றும் சாடியுள்ளார்.உழைக்கும் உண்மைத் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத ஒரு தலைமை மக்களின் மனதை எவ்வாறு வெல்ல முடியும் என்ற நேரடிக் கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.அதோடு உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா என்று அவர் கேட்டுள்ள கேள்விதான் தற்போது தமிழக அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா என்ற விஜயபாஸ்கரின் கேள்வி அவர் அதிமுகவில் தனது பயணத்தை முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.விராலிமலைத் தொகுதியில் அவர் தொடர்ந்து தனது ஆதரவாளர்களை நேரில் சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கட்சிக்குள் உரிய முக்கியத்துவம் இல்லாததால் அவர் விரைவில் மாற்று அரசியல் கட்சியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட மாற்றுத் தளங்களில் தங்களை இணைத்துக் கொண்ட சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்தன.அதே பாணியைப் பின்பற்றி சி.விஜயபாஸ்கரும் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் சட்டப்படி தனது விராலிமலை எம்எல்ஏ பதவியை முதலில் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரா அல்லது அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் எந்த திசையை நோக்கி நகரப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.இந்தச் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »