திருப்பூர் , May 26 : ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக முற்றிலும் இலவசமாகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியிலேயே, மாணவர் சேர்க்கைக்குக் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சேர்க்கையின் போது பெற்றோர்களிடம் ரூ. 3,500 வரை கறாராகப் பணம் வசூலிக்கப்படும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி, கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE Act), தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு அரசுப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கைக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது மிகத் தெளிவான விதிமுறை. சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் முதல் மதிய உணவு வரை அனைத்தும் அரசே இலவசமாக வழங்கி வரும் நிலையில், கணக்கம்பாளையத்தில் இந்த விதிகள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருப்பூர் வடக்கு வட்டத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பள்ளி நிர்வாகம் சார்பில் ‘பெற்றோர் ஆசிரியர் சங்க’ (PTA) கலந்தாய்வுக் கூட்டம் என்ற ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல்நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டாயக் கல்வி கட்டணமாக ரூ. 2,500 வசூலிக்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கென பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே நேரடியாகப் பெற்றோர்களிடம் பணத்தைப் பெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read : அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலிகள் கடித்த அதிர்ச்சி.. உறவினர்கள் போராட்டம்
அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயமாக, மாற்றுப் பள்ளிகளில் இருந்து இங்கு வந்து சேர விரும்பும் மாணவர்களுக்குக் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு பள்ளிகளில் படித்துவிட்டு இந்தக் கணக்கம்பாளையம் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேர வரும் மாணவர்களிடம் கூடுதலாக ஆயிரம் ரூபாய் சேர்த்து, மொத்தம் ரூ. 3,500 கறாராக வசூலிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குமுறுகின்றனர்.
“தனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சுமக்க முடியாமல் தான், எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்குக் கூட்டி வருகிறோம். ஆனால், இங்கேயும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டால் நாங்கள் எங்கே போவது?” என்று தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வந்த தினக்கூலிப் பெற்றோர் சிலர் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் வேதனை தெரிவித்துள்ள பெற்றோர்கள், “பள்ளியில் கூடுதலாகப் பணியமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம், கழிப்பிடப் பராமரிப்பு மற்றும் இதர வளாகப் பணிகளுக்காகவே இந்தப் பணம் பெறப்படுகிறது என்று பள்ளித் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் செலுத்தும் இந்த ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ ரசீதும் (Receipt) வழங்கப்படுவதில்லை” என்று குற்றம் சாட்டுகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் நிலவும் தற்காலிக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் சிறிய தொகையை நன்கொடையாகப் பெறுவது வழக்கம் என்றாலும், அதனைச் சேர்க்கைக்கான நிபந்தனையாக மாற்றி, இவ்வளவு பெரிய தொகையைக் கட்டாயமாக வசூலிப்பது சட்டப்படியும், அறப்படியும் ஏற்புடையதல்ல என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கத்தின் இலவசக் கல்வித் திட்டங்களைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் இந்தச் சட்டவிரோதக் கட்டண வசூல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அரசுப் பள்ளிகளின் மாண்பைக் குலைக்கும் வகையில், சேர்க்கைக்குக் கட்டணம் வசூலிக்கும் இத்தகையச் செயல்களை மாவட்டப் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும். வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள பெற்றோர்களைக் கட்டாயப்படுத்திப் பணம் பறிக்கும் இந்த நடைமுறைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரியத் துறை ரீதியான விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருப்பூர் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





