
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation SHIELDNET) அதிரடி நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமாகத் தொடர்ந்தது. ரவுடிகள் வேட்டை, வாகன சோதனைகள், பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் என ஒட்டுமொத்த மாவட்டக் காவல்துறையும் களமிறங்கியுள்ளதால் மாவட்டம் முழுவதும் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.
கடந்த மே 20-ம் தேதி முதல் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் இந்த சிறப்பு ஆபரேஷன் தொடங்கப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சமூக விரோத சக்திகளை முன்கூட்டியே கண்டறிந்து முடக்குவதே இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள பழைய குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் பட்டியலைத் தயாரித்து.. அவர்களின் தற்போதைய நடமாட்டத்தை உளவுப்பிரிவு போலீசாரும், அந்தந்தப் பகுதி காவல் நிலைய அதிகாரிகளும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகப் பிடிபடாமல் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்யவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆபரேஷனின் மூன்றாவது நாளான இன்று (22.05.2026) மாவட்டம் முழுவதும் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. காவல்துறையின் கணக்கெடுப்பில் உள்ள 32 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் (History Sheeters) வீடுகள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் நேரடிச் சோதனை மேற்கொண்டனர். இதில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட முயன்ற மற்றும் வழக்குகளில் தொடர்புடைய 3 முக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .
29 பேர் முன்னெச்சரிக்கை கைது :குற்றச் சம்பவங்கள் நிகழும் முன்பே அவற்றைத் தடுக்கும் நோக்கில், சட்டம் ஒழுங்குக்குக் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று கருதப்படும் 29 நபர்களைப் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (Preventive Arrest) இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படியான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நீதிமன்றங்களால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகக் காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த 8 பேரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களின் பிடிவாரண்டுகளை போலீசார் இன்று நிறைவேற்றியுள்ளனர். இதுதவிர பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 126-ன் கீழ், சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் செயல்பட்ட 4 நபர்களுக்கு எதிராகக் கடுமையான தடுப்பு காவல் நடவடிக்கைகள் எடுகாபட்டுள்ளன .
105 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – நகரப் பகுதிகள் மட்டுமின்றி, மாவட்டத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறச் சாலைகளிலும் ஆங்காங்கே தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் முறையற்ற வாகன ஓட்டிகளைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இன்றைய சோதனையின் போது, நம்பர் பிளேட் (பதிவு எண்) இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஓட்டப்பட்ட இருசக்கர வாகனங்கள், நீதிமன்ற உத்தரவுகளை மீறி அதிக வெளிச்சம் தரும் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தம் எழுப்பும் வகையில் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டிருந்த 105 இருசக்கர வாகனங்களை போலீசார் மொத்தமாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டு மீண்டும் தங்களது குற்றப் பின்னணியைத் தொடரும் நபர்கள் மீதும் மாவட்ட காவல்துறை கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது . அவ்வாறு ஜாமீன் விதிகளை மீறுபவர்களின் ஜாமீனை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகளில் நீதிமன்றப் பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் இந்த ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுத் தடையின்றித் தொய்வில்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் ஒட்டுமொத்த அமைதியைப் பாதுகாக்கும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கைகள் வரும் நாட்களிலும் தொடர்ந்து நீடிக்கும் என நெல்லை மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடிப் பாய்ச்சல், குற்றப் பின்னணி கொண்டவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












